×

கொடிவேரி அணையில் ஆபத்தை உணராமல் குளிக்கும் சுற்றுலா பயணிகள்

கோபி, மார்ச் 20:   கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் ஆழமான பகுதிக்கு சென்று குளிப்பதால் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது.   கோபி அருகே உள்ள கொடிவேரி அணையானது சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் பவானி ஆற்றின் குறுக்கே சுமார் ஒரு கிலோ மீட்டர் நீளத்தில் 15 அடி உயரத்திற்க தடுப்பணை கட்டப்பட்டது. இந்த அணைக்கு அரசு விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்த அணையின் மணல் போக்கி உள்ள பகுதியில் சுமார் 20 அடி ஆழம் உள்ளது. அந்த இடத்திற்கு செல்லும் சுற்றுலா பயணிகள் சுழலில் சிக்கி உயிரிழந்து வருகின்றனர்.  இதனால் சுற்றுலா பயணிகளை கண்காணிப்பதற்காக அணையின் இரண்டு பகுதியிலும் புறக்காவல் நிலையமும், கண்காணிப்பு கேமிராவும் அணையின் இரண்டு பகுதியிலும் அமைக்கப்பட்டுள்ளது. அணையில் மணல் போக்கி உள்ள பகுதியில் உயிர் பலி ஏற்படுவதால், அந்த இடத்திற்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இருந்த போதிலும் பலரும் இந்த பகுதிக்கு சென்று குளித்து வருகின்றனர். இந்நிலையில், தடை விதிக்கப்பட்ட பகுதியில் சிவப்பு கயிறு கட்டப்பட்டு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தடையை மீறி செல்பவர்களை கைது செய்ய எஸ்.பி. சக்திகணேசன் உத்தரவிட்டுள்ளார். தற்போது கோடை விடுமுறை என்பதால் தினமும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. மக்களவை தேர்தல் பணிக்காக பெரும்பாலான போலீசார் அனுப்பப்பட்டுள்ளனர். இதனால் பெரும்பாலான காவல் நிலையங்களில் போலீஸ் பற்றாகுறையால் புகாரை விசாரிக்க முடியாத நிலை உள்ளது. இதனால் கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகளை எச்சரிக்கை செய்ய போலீசார் இல்லாததால் ஆபத்தை உணராமல் ஆற்றின் குறுக்கே குழந்தைகளுடன் சுற்றுலா பயணிகள் செல்கின்றனர். பொதுப்பணித்துறையும், காவல்துறையும் போதிய அளவு பணியாளர்களை நியமித்து, அணையின் உள் பகுதியில் செல்வோரை தடுத்து உரிய எச்சரிக்கை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : bathing residents ,
× RELATED ஈரோட்டில் தேர்தலுக்கு தேவையான...