×

நாமக்கல் தொகுதி சுயேட்சை வேட்பாளர் காந்தி வேடத்தில் வந்து மனு தாக்கல்

நாமக்கல், மார்ச் 20: நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட, அகிம்சா சோசியலிஸ்ட் கட்சி சார்பில் காந்தி வேடமிட்டு, சைக்கிளில் வந்து மனுதாக்கல் செய்தார். தமிழகத்தில் நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. வேட்புமனு தாக்கலையொட்டி நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நாமக்கல் தொகுதியில் போட்டியிட மேற்கு பாலப்பட்டியைச் சேர்ந்த அகிம்சா சோசியலிஸ்ட் கட்சியின் நிறுவனர் ரமேஷ் என்பவர் முதல் ஆளாக வந்து தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். முன்னதாக, காந்தி வேடமிட்டு சைக்கிளில் வந்த அவர் வேட்பு மனுவை நிரப்பி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான ஆசியா மரியத்திடம் தாக்கல் செய்தார். வேட்பாளர் ரமேஷ் செல்லப்பம்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு வரை படித்துள்ளார். டிப்ளமோவில் யோகா படித்து பயிற்சி நடத்தி வருகிறார். இது தவிர பல்வேறு சமூக பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இவர், கடந்த 2017ம் ஆண்டு அகிம்சா சோசியலிஸ்ட் கட்சி என்ற கட்சியை பதிவு செய்து நடத்தி வருகிறார். கட்சியின் நிறுவனராகவும் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.

மனுதாக்கல் குறித்து அவர் கூறியது, காந்தி மற்றும் புத்தரின் கொள்கைகளை பின்பற்றியே நாங்கள் கட்சி நடத்தி வருகிறோம். எங்கள் கட்சிக்கு ஹாக்கி பேட்டுடன் கூடிய பால் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் பஞ்சாயத்து கவுன்சிலர் மற்றும் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளேன். அடிப்படை வசதிகள் குறித்து பிரசாரம் செய்வேன். வரும் தேர்தலில் எனக்கு 7 ஆயிரம் வாக்குகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. தோல்வியை பற்றி கவலையில்லை. 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது நோக்கம். வாக்காளர்கள் அனைவரும் நோட்டாவிற்கு வாக்களிக்காமல் என்னை போன்ற எந்த ஒரு வேட்பாளர்களுக்காவது வாக்கினை அளிக்க வேண்டும் என்றார்.

Tags : Gandhi ,Namakkal block ,Independent ,
× RELATED குஜராத் காந்தி நகர் தொகுதியில் அமித் ஷா வேட்பு மனு தாக்கல்