முசிறி கைகாட்டியில் ஜனநாயகத்தை நிலைநிறுத்த தகுதியுள்ள அனைவரும் வாக்களிக்க வேண்டும் துண்டுபிரசுரங்கள் வழங்கி அலுவலர்கள் பிரசாரம்

தா.பேட்டை, மார்ச் 20:  முசிறி  கைகாட்டியில் வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தேர்தல்  அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை  வழங்கினர். முசிறியில் நேற்று வாக்காளர்களிடையே விழிப்புணர்வை  ஏற்படுத்தும் விதமாக தேர்தல் அலுவலர்கள் காவல்துறையினருடன் சேர்ந்து  விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கும் நிகழ்ச்சியை நடத்தினர்.  நிகழ்ச்சிக்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரன் தலைமை  வகித்தார். டிஎஸ்பி தமிழ்மாறன், தாசில்தார் சுப்பிரமணியன்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் முசிறி கைகாட்டி பஸ்  நிலையம், தனியார் ஜவுளி நிறுவனங்கள், சந்தை, பழைய பேருந்து நிலையம், மக்கள்  கூடும் இடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை  வழங்கினர். அப்போது வரும் நாடாளுமன்ற தேர்தலில் தவறாமல் வாக்களிக்க வேண்டும்.  வாக்குகளை விலைக்கு விற்காமல் சிறப்பான முறையில் மக்களுக்கு சேவையாற்றும்  அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பது ஜனநாயக கடமை. வாக்களிப்பது  ஒவ்வொருவரின் உரிமை. இந்தியாவில் ஜனநாயகத்தை நிலைநிறுத்த வேண்டுமானால்  ஒவ்வொரு குடிமகனும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என  தேர்தல் அலுவலர்கள் மற்றும் போலீசார் பொதுமக்கள் மத்தியில் வலியுறுத்தி  பேசினர். அப்போது வாக்களிப்பதன் அவசியம் குறித்து அச்சிடப்பட்ட துண்டு  பிரசுரங்கள் பொதுமக்களிடம் விநியோகம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் தேர்தல்  அலுவலர்கள் போலீசார் மற்றும் சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: