திருவெறும்பூர் காட்டூரில் அச்சமின்றி மக்கள் வாக்களிக்க போலீசார் கொடி அணிவகுப்பு

திருவெறும்பூர், மார்ச் 20:    திருவெறும்பூர் தொகுதி மக்கள் நாடாளுமன்ற தேர்தலில் அச்சமின்றி வாக்களிக்கும் விதத்தில் திருச்சி எஸ்பி ஜியாஉல்ஹக் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

 நாடாளுமன்ற தேர்தல் வரும் 18ம் தேதி நடைபெற இருப்பதையொட்டி வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கும் விதத்தில் மத்திய காவல் படை போலீசாரும், மாநில போலீசாரும் இணைந்து திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் மஞ்சத்திடல் பாலத்தில் இருந்து பாப்பாக்குறிச்சி சாலை  வழியாக மீண்டும் மஞ்சத் திடல் பாலம் வரை திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் கொடி துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பு நடத்தினர். இந்த கொடி அணிவகுப்பை எஸ்பி ஜியாஉல்ஹக்  தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட உதவி தேர்தல் பொறுப்பாளரும் மாவட்ட வழங்கல் அதிகாரியுமான  கிருஷ்டி, திருவெறும்பூர் ஏஎஸ்பி பிரவீன் உமேஷ் டோங்ரே, தாசில்தார் அண்ணாதுரை மற்றும் போலீசாரும் வருவாய்த்துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர். பின்னர் எஸ்பி ஜியாஉல்ஹக் கூறியதாவது, வரும் நாடாளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் விதமாக இந்த கொடி அணிவகுப்பு நடத்தப்படுகிறது இந்த நேரத்தில் தேர்தல் வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களுக்கு காவல்துறை பாதுகாப்பாக உள்ளது என்பதை தெரியப்படுத்தும் விதமாக இந்த கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Related Stories: