×

தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரத்தை மாணவர்களுக்கு உணர்த்தும் திருவாரூர் அருங்காட்சியகம்

திருவாரூர், மார்ச் 20: தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரத்தை மாணவர்களுக்கு உணர்த்தும் வகையில் திருவாரூர் அருங்காட்சியகம் இருந்து வருகிறது. திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலின் மேற்கு புறத்தில் அரசு அருங்காட்சியமானது இயங்கி வருகிறது. இங்கு பண்டைய கால தமிழர்கள் பயன்படுத்திய நரம்புகளான இசைக்கருவிகள் மற்றும் பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட கருங்கல்லால் ஆன கைக்கோடரி உட்பட பல்வேறு பொருட்கள் மற்றும் பஞ்சமுக வாத்தியம் மற்றும் கடல் வாழ் உயிரினங்கள், தாவரங்கள், விலங்குகள் போன்றவை மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்காக பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் இதை தவிர திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நன்னிலம் உட்பட பல்வேறு ஊர்களில் பூமிக்கடியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 9, 10, 11 மற்றும்  12ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த நடராஜர், பைரவர், தட்சிணாமூர்த்தி, அய்யனார், ஸ்ரீதேவி, சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை, கணேசர் உட்பட பல்வேறு ஐம்பொன் சிலைகளும் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. இதைத் தவிர இந்தியாவின் நாணயங்கள் மற்றும் தபால்தலைகள் மட்டுமின்றி பிரான்ஸ், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, சீனா  மற்றும் அரபு நாடுகள் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தபால் தலைகள், நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் போன்றவையும் வைக்கப்பட்டுள்ளன. இது மட்டுமின்றி இங்கு பிரசித்தி பெற்ற புத்தர் சிலையும் ஒன்றும் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையானது கிபி 10 மற்றும் 11ம் நூற்றாண்டை சேர்ந்தது என்று கூறப்படுகிறது. மேலும் இந்த சிலையானது திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகாவிற்கு உட்பட்ட கண்டிரமாணிக்கம் என்ற இடத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதன் உயரம் என்பது 63 அங்குலம், அகலம் 33 அங்குலமாகும். மேலும் இந்த சிலை கண்டெடுக்கப்பட்ட கண்டிரமாணிக்கத்தில் பௌத்த பள்ளி ஒன்று இருந்ததற்கான ஆதாரங்களும் சான்றுகள் வாயிலாக தெரிய வந்துள்ளது.
மேலும் இந்த சிலையானது தியானம் செய்வதைப் போன்று கோலத்தில் இருந்து வரும் நிலையில் உள்ளங்கையில் தர்மசக்கரம் குறியும்  பொறிக்கப்பட்டுள்ளது. இது போன்று பல்வேறு சிறப்பம்சங்களுடன் கூடிய சிலைகள் மற்றும் தமிழர்கள் பயன்படுத்திய பழங்கால பொருட்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், தபால் தலைகள் மற்றும் கடல்வாழ் தாவரங்கள், விலங்குகள், உயிரினங்கள், சங்குகள், ஐம்பொன் சிலைகள் மற்றும் தோல் பொருட்கள்,  பொம்மைகள் உட்பட பல்வேறு கலைப்பொருட்களும், சிலைகளும், சிற்பங்களும் இந்த அரசு அருங்காட்சியத்தில் இருந்து வருவதால் இதனை தினந்தோறும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பார்வையிட்டு கண்டுகளித்து வருகின்றனர். மேலும் இந்த அருங்காட்சியகமானது வாரத்தில் வெள்ளிக்கிழமை தவிர பிற தினங்களில் காலை 9.30  மணி முதல் மாலை 5 மணி வரையில் இயங்கி வருகிறது. இதனைப் பார்வையிடுவதற்கு வெளிநாட்டவர்களுக்கு கட்டணமாக ரூ 100ம்,  பிறருக்கு ரூ 5 மற்றும் குழந்தைகளுக்கு ரூ 3 வசூல் செய்யப்பட்டு வருகிறது. மேலும் பள்ளி சீருடையில் வரும் அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. எனவே இந்த அரசு அருங்காட்சியத்தில் உள்ள சிறப்பு அம்சங்களை பள்ளி மாணவர்கள் கண்டுகளித்து தங்களது கல்விக்கு தேவையான விபரங்களை பெற்றுக் கொள்ளலாம் என்று அருங்காட்சியகத்தின்  காப்பாளர் மருதுபாண்டியர் தெரிவித்துள்ளார்.

Tags : Thiruvarur Museum ,Tamils ,
× RELATED தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம்