×

போலீஸ் நிர்பந்தத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது நள்ளிரவு 1 மணி வரை நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகளை நடத்த அனுமதி தேர்தல் ஆணையத்துக்கு கிராமிய கலைஞர்கள் வலியுறுத்தல்

தஞ்சை, மார்ச் 20: போலீஸ் நிர்பந்தத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் நள்ளிரவு 1 மணி வரை நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகளை நடத்த அனுமதி அளிக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்துக்கு தமிழ்நாடு கிராமிய கலைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சையில் தமிழ்நாடு கிராம கலைஞர்கள் மற்றும் நாட்டுப்புற அனைத்து ஒருங்கிணைப்பு சங்க அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநில தலைவர் சின்னப்பொண்ணு குமார் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் சித்தன் ஜெயமூர்த்தி, மாநில ஆலோசகர் ராஜேந்திரன் தேன்மொழி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தமிழ் மக்களின் கலாசாரமான கிராமிய கலைநிகழ்வுகள் ஆண்டுக்கு 5 மாதங்களுக்கு மட்டுமே நடக்கும் தொழிலாகும். இந்த மாதங்களில் கிடைக்கும் வருவாயை கொண்டு தான் ஆண்டு முழுவதும் படிப்பு, வீட்டு வாடகை உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் மேற்கொள்ள முடியும். தற்போது மேற்கண்ட வருவாய் ஈட்டும் காலம் என்பதால் கிராம கலைஞர்கள் திருவிழா, கிராம கலைநிகழ்ச்சிகளுக்கு சென்று வருகின்றனர். தற்போது தேர்தலை காரணம் காட்டி இரவு 10 மணிக்குள் கிராமிய நிகழ்ச்சிகளை முடிக்க காவல்துறையினர் நிர்ப்பந்திக்கின்றனர்.

நிகழ்ச்சி நடத்த எங்களுடன் ஒப்பந்தம் செய்தவர்கள் தற்போது காவல்துறையின் நிர்ப்பந்தத்தால் நிகழ்ச்சிகளை ரத்து செய்து வருகின்றனர். இதனால் தமிழகம் முழுவதும் 3 லட்சம் நாட்டுப்புற மற்றும் கிராமிய கலைஞர்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். எனவே நாட்டுப்புற கலைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையம் கலைநிகழ்ச்சிகளை இரவு 1 மணி வரை நடத்த அனுமதியளிக்க வேண்டும். கலைமாமணி விருது 5 பேருக்கு தரும் நிலையில் 8 ஆண்டுக்கு மொத்தம் 14 பேருக்கு மட்டும் கலைமாமணி விருது வழங்கப்பட்டுள்ளது. அதில் மதுரையை சேர்ந்த சோமசுந்தரம் என்பவரின் அமைப்பை சேர்ந்த தகுதியற்ற 9 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதை அரசு உடனடியாக மறு பரிசீலனை செய்ய வேண்டும். ஆண்டுக்கு 4 பேர் வீதம் மொத்தம் 32 பேருக்கு வழங்க வேண்டிய நிலையில் 14 பேருக்கு மட்டும் விருது வழங்கியுள்ளனர். மீதமுள்ள 18 பேரை தமிழகத்தின் கலைகளின் முன்னோடிகள் தலைமையில் கண்டறிந்து கலைமாமணி விருதை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உளளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில செயலாளர் இயக்குனர் ராசி.மணிவாசகம், மாநில பொருளாளர் கயல்.கோபு, மாநில துணை செயலாளர் சந்திரசேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags : Midnight Artists for Election Commission ,
× RELATED ஒரத்தநாடு அருகே பின்னையூர் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு