தேர்தல் புகார்களை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை திறப்பு

தஞ்சை, மார்ச் 20: தேர்தல்  தொடர்பான புகார்களை தெரிவிக்க தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல்  கட்டுப்பாட்டு அறையை கலெக்டர் அண்ணாதுரை திறந்து வைத்தார். தஞ்சை  நாடாளுமன்றம், தஞ்சை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி  நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று துவங்கியது. தேர்தல் தேதி  அறிவிக்கப்பட்ட நாள் முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. தேர்தல்  நடத்தை விதிமுறை மீறல் மற்றும் பணம் பட்டுவாடா உள்ளிட்ட தேர்தல் தொடர்பான  அனைத்து புகார்களையும் தெரிவிப்பதற்கு வசதியாக தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில்  தரைதளத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை  நேற்று திறக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் கட்டுப்பாட்டு அறையில்  மிகப்பெரிய அளவிலான 6 எல்இடி டிவி பொருத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு டிவியிலும்  தஞ்சை மாவட்டத்தில் நடைபெறும் தேர்தல் தொடர்பான செய்திகளை பார்வையிட்டு  அதை பதிவு செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தேர்தல் விதிமுறைகளை  மீறி விளம்பரம் மற்றும் சில செய்திகளை வெளியிடும் உள்ளூர் தொலைக்காட்சி  பதிவுகளையும் பார்வையிட்டு பதிவு செய்யப்பட்டு வருகிறது.

தஞ்சை  மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதியில் செயல்படும் பறக்கும்படை, நிலையான  கண்காணிப்புக்குழு ஆகியவற்றின் இயக்கம் குறித்து ஜிபிஆர்எஸ் கருவி மூலம்  கண்காணித்து அதை இந்த டிவி வாயிலாக பார்த்து அதையும் பதிவு செய்யப்பட்டு  வருகிறது. இவ்வாறு  தஞ்சை மாவட்டத்தில் எந்த ஒரு பகுதியிலும் தேர்தல் தொடர்பான விதிமீறல்  நடத்தால் கண்காணிக்க 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறை  அமைக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க  18004258036 என்ற கட்டணம் இல்லாத தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த  தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு 24 மணி நேரமும் தேர்தல் தொடர்பான  புகார்களை தெரிவித்தால் அந்த புகார்கள் பதிவு செய்யப்பட்டு தொடர்புடைய  கண்காணிப்பு குழு அல்லது பறக்கும் படைக்கு தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை  எடுக்கப்படும். இதை கலெக்டர் அண்ணாதுரை நேற்று பார்வையிட்டார். இதன்பின்னர்  நாளிதழ்களை கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள ஊடக சான்று மற்றும் கண்காணிப்பு  குழு அலுவலகத்தை பார்வையிட்டார். பின்னர் ஊடக மைய அறை, மாவட்ட தொடர்பு  மையம் ஆகியவற்றையும் கலெக்டர் அண்ணாதுரை பார்வையிட்டார். டிஆர்ஓ சக்திவேல் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Related Stories: