×

கபிஸ்தலம் காவிரி ஆற்றின் கரையில் இறைச்சி கழிவு, குப்பைகளை கொட்டுவதால் துர்நாற்றம் பொதுமக்கள் அவதி

பாபநாசம், மார்ச் 20: கபிஸ்தலம் அருகே உள்ள காவிரி ஆற்றின் கரையில் இறைச்சி கழிவுகளை  கொட்டுவதால் ஏற்படும் துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் செல்லும் சாலையில் காவிரி  ஆற்றின் மீது பாலம் உள்ளது. இந்த பாலத்தின் கரைகளில் மீன், கோழி, உள்ளிட்ட  இறைச்சி கழிவுகள் தினம்தோறும் கொட்டப்படுகின்றன. இதோடு ஊராட்சியில் சேறும்  குப்பைகளையும் கொட்டி தீவைத்து எரிக்கின்றனர். இதனால் ஏற்படும்  துர்நாற்றத்தால் பாலத்தை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள்  அவதிக்கு உள்ளாகின்றனர். மேலும் குப்பைகளை தீயிட்டு எரிப்பதால் ஏற்படும்  புகைமண்டலத்தாலும் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். கபிஸ்தலம்  சுற்றுவட்டார பகுதிகளில் மேலகபிஸ்தலம், சருக்கை, உம்பளாப்பாடி, கருப்பூர்,  உள்ளிட்ட ஏராளமான கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு இந்த பாலத்தை  கடந்து தான் செல்ல வேண்டும். பாபநாசத்தில் இருந்து சுவாமிலை, திருவையாறு  உள்ளிட்ட ஊர்களுக்கும் இந்த பாலத்தை கடந்து தான் செல்ல வேண்டும். கோழி  உள்ளிட்ட இறைச்சி கழிவுகளை கொட்டி எரிப்பதால் சுற்றுவட்டார பகுதியை  சேர்ந்த பொதுமக்களுக்கு தொற்றுவியாதிகள் ஏற்படும்  அபாயம் உள்ளது. காவிரி  ஆற்றின் கரையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வரும் குடிமகன்கள் பயன்படுத்தி  விட்டு போடும் பிளாஸ்டிக் கப், கேரி பேக் உள்ளிட்டவற்றால் காவிரி ஆற்றின்  கரை சுற்றுச்சூழல் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது. எனவே காவிரி ஆற்றின் கரையில்  இறைச்சி கழிவுகளை கொட்டுவதை தடுக்க வேண்டும். மேலும் கரையோரத்தில்  குவிந்து கிடக்கும் அகற்றுவதுடன் எரிப்பதை தடுக்க வேண்டுமென பொதுமக்கள்  தெரிவித்துள்ளனர்.

Tags : banks ,river ,Cauvery ,
× RELATED மங்களகோம்பை செல்லும் சாலையில் புலியூத்து ஆற்றின் குறுக்கே பாலம் தேவை