×

பெண்கள் பாதுகாப்பிற்கு பயனுள்ள செய்திகளை பகிர்ந்துகொள்ள வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்

காரைக்கால், மார்ச் 20:  பெண்கள் பாதுகாப்பிற்கு பயனுள்ள செய்திகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் விக்ராந்த்ராஜா தெரிவித்துள்ளார். காரைக்காலில் செயல்படும் மகிளா பெண்கள் பாதுகாப்பு தன்னார்வ அமைப்பிற்கு, மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் பக்கபலமாக இருக்கும் என மாவட்ட கலெக்டர் விக்ராந்த்ராஜா தெரிவித்துள்ளார். காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மகிளா பெண்கள் பாதுகாப்பு தன்னார்வ அமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் எஸ்.எஸ்.பி ராகுல் ஆல்வா தலைமை வகித்தார். இக்குழுவில் போலீசாரால் தேர்வு செய்யப்பட்ட பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களின் பணி குறித்து போலீசார் கூறியது: பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் பெண்களுக்கு, பாலியல் தொந்தரவு ஈவ்டீசிங் மற்றும் செல்போனில் மிரட்டுதல் போன்ற குற்ற செயல்கள் நடந்தால், இந்த குழு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திலோ அல்லது உயர் காவல்துறை அதிகாரியிடமோ புகார் அளிக்கும். அவர்கள் உடனே நடவடிக்கை எடுப்பார்கள் என்றனர்.

தொடர்ந்து, கலெக்டர் விக்ராந்த்ராஜா பேசியது: பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு உடனே களையும் நோக்கில் இந்த குழு செயல்படுவது பாராட்டத்தக்கது. மேலும் இந்த குழுக்கள் அந்தந்த காவல் நிலையங்களில் தாங்கள் தினசரி சந்தித்த வழக்குகள் குறித்தும், சம்பவ இடத்தில் மேற்கொண்ட நடவடிக்கை, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்தும்  ஆலோசனை நடத்த வேண்டும். மேலும் மகிளா பெண்கள் பாதுகாப்பு தன்னார்வ அமைப்பு தங்களுக்குள் ஒரு வாட்ஸ் அப் குழுவை ஏற்படுத்த வேண்டும். அதில் பெண்கள் பாதுகாப்பிற்கு பயனுள்ள செய்திகளை பகிர்ந்துகொள்ள வேண்டும். ஏதேனும் குற்றங்கள் நடப்பின் இதில் பதிவு செய்யலாம். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும். இந்த குழுவினர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறைக்கு ஏதாவது கூற வேண்டுமென்றாலும் எழுத்து மூலமாக தெரியப்படுத்த வேண்டுகிறோம். இந்த குழுவிற்கு மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் எப்பொழுதும் பக்கபலமாக இருக்கும் என்றார். கூட்டத்தில் துணை கலெக்டர் பாஸ்கர், மாவட்ட போலீஸ் எஸ்.பிகள் மாரிமுத்து, வீர வல்லவன்  மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : collector ,women ,
× RELATED குடிநீர் பிரச்னைகளுக்கு...