×

தோகைமலை பகுதி மல்லிகை தோட்டங்களில் நவீன இயந்திரம் மூலம் களையெடுப்பு

தோகைமலை, மார்ச் 20: தோகைமலை பகுதியில் மல்லிகை பூ சாகுபடி செய்த விவசாயிகள் நவீன இயந்திரம் மூலம் களையெடுப்பு பணிகள் செய்து வருகின்றனர். கரூர் மாவட்டம் தோகைமலை பகுதியில் உற்பத்தியாகும் மல்லிகை பூக்கள் திருச்சி பூ மார்க்கெட்டில் சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுகிறது. தோகைமலை ஒன்றியத்தில் நெய்தலூர், சேப்ளாப்பட்டி, முதலைபட்டி, ஆர்ச்சம்பட்டி, தளிஞ்சி, ஆலத்தூர், பாதிரிபட்டி, தோகைமலை மற்றும் சூரியனூர், நங்கவரம் உட்பட பல்வேறு பகுதிகளில் மல்லிகை பூ சாகுபடியை விவசாயிகள் செய்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக பருவமழை சரியாக பெய்யாத நிலையில் தோகைமலை ஒன்றிய பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. இதனால் விவசாய நிலங்களில் பல்வேறு பயிர்களுக்கு தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் சாகுபடி செய்வதை வெகுவாக குறைத்து விட்டனர்.

இதனால் வாரத்திற்கு ஒருமுறை தண்ணீர் விட்டால் போதும் என்பதாலும், மாசி மாதம் முதல் கார்த்திகை மாதம் வரை மொத்தம் 10 மாதங்கள் வருவாயை தரக்கூடிய மல்லிகை பூ சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு ராமேஸ்வரம் பகுதியில் இருந்து ஒரு மல்லிகை செடி ரூ. 4க்கு விலைக்கு பெற்று நடவு செய்கின்றனர். ஒரு ஏக்கருக்கு 2 ஆயிரம் செடிகள் தேவைப்படுவதாகவும், நடப்படும் செடிகள் காய்ந்து விடும் என்பதால் ஒரு பதியத்திற்கு 3 அல்லது 4 செடிகளை சேர்த்து நடவு செய்வதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மல்லிகை பூக்கள் பூக்க தொடங்கிய பிறகு ஒரு கிலோ மல்லிகை பூக்கள் ரூ.100 முதல் விசேஷ காலங்களில் ரூ.1500 வரை விற்பனையாகிறது. இதனால் தற்போது அனைத்து பகுதிகளிலும் மல்லிகை பூ சாகுபடி செய்வதற்கு விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் அரசு தரப்பில் இருந்து மல்லிகை சாகுபடிக்கு எந்த ஆலோசனைகளும் வழங்குவதில்லை என்றும் விவசாயிகள் கூறுகின்றனர். தற்போது ஆட்கள் பற்றாக்குறையால் நவீன இயந்திரம் மூலம் மல்லிகை செடி நடவு செய்த வயல்களில் களையெடுப்பு பணிகளை செய்து வருகின்றனர்.

Tags : plant ,
× RELATED கூடங்குளம் முதலாவது அணுமின்...