×

கரூரில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருள் விற்பனை விறுவிறுப்பு

கரூர், மார்ச் 20:  கரூரில் குட்கா விவகாரம் விஸ்வரூபம் எடுத்தும் விற்பனை சக்கைபோடுபோடுகிறது. உடல்நலத்திற்கு தீங்கு விளைவிககும் பான்பராக், குட்கா போன்ற புகையிலை பொருட்களை விற்பனை செய்யவோ, இருப்பு வைக்கவோ சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது. கல்வி நிலையங்கள் அருகே விற்பனை செய்யக்கூடாது என தடை விதிக்கப்பட்டது. எனினும் கரூர் பஸ் நிலையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இதன் விற்பனை கனஜோராக நடைபெற்று வருகிறது. தமிழக அளவில் குட்கா விவகாரம் சூடுபிடித்து தொடர்ந்து ரெய்டுகள் நடைபெற்றன. ஆனாலும் கரூர் பகுதியில் கொஞ்சம் கூட தயக்கம் இன்றி விற்பனை செய்து வந்தனர். கடந்த ஓராண்டுக்கும் மேலாக பல்வேறு புகார் மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம்  ரூ.41 லட்சம் மதிப்புள்ள குட்கா மூட்டைகளை பதுக்கி வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. 3 இடங்களில் குடோன்களில் பதுக்கி விற்பனை செய்துள்ளனர். வெள்ளக்கவுண்டன் நகரில் 2545 கிலோ, ராயனூர் அண்ணா நகரில் 2940 கிலோ, ஒத்தையூரில் உள்ள ஒரு தோட்ட வீட்டில் 150 கிலோ என 3 இடங்களில் இவைகளை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். கரூரில் குட்கா விவகாரம் விஸ்வரூபம் எடுத்தும் விற்பனை குறையவில்லை. முன்பு பாக்கெட் ரூ.20க்கு விற்பனையானது தற்போது இருமடங்காக விலை உயர்ந்து ரூ.40க்கு விற்பனை செய்கின்றனர்.


இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், குட்கா விவகாரம் தொடர்பாக பல்வேறு ரெய்டுகள் நடைபெற்றும் கரூர் மாவட்டத்தில் விற்பனையை தொடர்ந்து கொண்டிருந்தனர். தினமும் பொது இடங்களில் உள்ள குப்பை தொட்டிகளை பார்த்தாலே அதில் ஏராளமான குட்கா பாக்கெட்டுகள் இருப்பதை தெரிந்து கொள்ளலாம். குட்கா விவகாரத்தை கரூர் மாவட்ட போலீசாரோ, உளவுத்துறையோ கண்டுபிடிக்கவில்லை.

நாமக்கல் மாவட்டத்தில் கீரம்பூரில் நடத்திய வாகன சோதனையில் குட்கா கடத்தல் லாரியை அங்குள்ள போலீசார் பிடித்தனர். அந்த  டிரைவர் அளித்த புகாரின்பேரில் கரூரில் மூன்று குடோன்களில் பதுக்கிய குட்கா மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. 2 பேரை கைது செய்துள்ளனர். நாமக்கல்லில் குட்கா லாரி பிடிபடவில்லையெனில் கரூரில் விற்பனை கனஜோராக நடைபெற்று கொண்டுதான் இருக்கும். வாகன ஓட்டுனர்கள் 60 சதவீதம் இதனை பயன்படுத்துகின்றனர். ஆங்காங்கே பொதுஇடங்களில் குட்காவை பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றனர். எந்த விதத்திலும் குட்கா விற்பனை குறையவில்லை. தடையை பயன்படுத்தி குட்காவின் விலையையும் உயர்த்தி விற்பனை செய்கின்றனர். மேலும் கலப்படம் செய்தும் விற்பனை செய்கின்றனர். பஸ் நிலைய கடைகள் உள்பட அனைத்து கடைகளிலும், கிராமங்கள் வரையிலும்  குட்கா ரகசிய விற்பனை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. திருட்டு விசிடி போல இதுவும் ஆகி விட்டது என்றனர்.

Tags : Karur ,
× RELATED கரூரில் போக்குவரத்துக்கு இடையூறாக ரோட்டில் உலா வரும் கால்நடைகள்