சங்கரன்கோவிலில் ஆக்கிரமிப்பு அகற்றம்; நெரிசலை சமாளிக்க அதிரடி நடவடிக்கை

சங்கரன்கோவில், மார்ச் 20: நெல்லை மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரங்களில், சங்கரன்கோவிலும் ஒன்று. இங்குள்ள சங்கர நாராயண சுவாமி கோயில், தென்தமிழத்தின் பிரசித்தி பெற்ற கோயிலாகும். மேலும் சங்கரன்கோவிலில் விசைத்தறி கூடங்கள், விவசாய விளை பொருட்களுக்கான கமிஷன் கடைகள், பூ மார்க்கெட், எலுமிச்சை மார்க்கெட், காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கடைகள் உள்ளன.சங்கரன்கோவில் நகரைச் சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் தினமும் வந்து செல்வதால் சங்கரன்கோவில் பேருந்து நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். பேருந்து நிலையத்ைத கடந்த சில ஆண்டுகளாக பொதுமக்கள் இருசக்கர வாகன நிறுத்துமிடமாகவும் பயன்படுத்தி வருவதால் கடும் நெரிசல் காணப்பட்டது. இதனால் பொதுமக்களும் கடும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர்.

இந்நிலையில் தேர்தல் விதிகள் காரணமாக சங்கரன்கோவில் நகர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மாற்றப்பட்டு புதிய இன்ஸ்பெக்டராக கண்ணன் பொறுப்பேற்றார். இவர், 2008-09ம் ஆண்டில் இதே காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர். அப்போது பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களிடம் பாராட்டு பெற்றார்.தற்போது இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்ற நிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம், போக்குவரத்து நெரிசலை சமாளிக்க பல தடாலடி நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளார். சங்கரன்கோவில் நகரை பற்றி நன்கு தெரியும் என்பதால், மக்களுக்கு இடையூறின்றி பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். முதற்கட்டமாக சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுத்தார். இதனால் பேருந்துகள் இடைஞ்சலின்றி வந்து செல்கின்றன. பஸ் நிலைய கடைகளின் ஆக்கிரமிப்புகளையும் அகற்ற உத்தரவிட்டார். இதேபோல் சங்கரன்கோவில் தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, நடைபாதையில் ஆக்கிரமிப்புகளை அகற்றினார்.ஆக்கிரமிப்புகள் அகற்றம், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு என இன்ஸ்பெக்டர் கண்ணன் மேற்கொண்டு வரும் அதிரடி நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர். இருப்பினும் பஸ் நிலையத்தில் ஒரு சிலர் தொடர்ந்து இருசக்கர வாகனங்களை நிறுத்தி வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: