பல்வேறு கட்சியினர் கோரிக்கையை ஏற்று தூத்துக்குடியில் தலைவர் சிலைகளில் மறைக்கப்பட்ட துணிகள் அகற்றம்

தூத்துக்குடி, மார்ச் 20: பல்வேறு கட்சியினரின் கோரிக்கை மற்றும் போராட்டத்தை தொடர்ந்து தூத்துக்குடியில் தலைவர்கள் சிலைகளை மூடி வைத்திருந்த துணிகள் அகற்றப்பட்டது.நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகளையொட்டி தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த காந்தி, காமராஜர், வஉசி, குரூஸ்பர்னாந்து, அண்ணா, எம்ஜிஆர் சிலைகளை மாநகராட்சி அதிகாரிகள் மூடி மறைத்திருந்தனர். இதனால் அனைத்து கட்சியினரும் அதிர்ச்சியடைந்தனர். மறைந்த தலைவர்கள் சிலைகளை மூடி மறைக்க வேண்டிய அவசியமில்லை என தேர்தல் கமிஷன் நடத்தை விதிமுறைகளை அரசியல் கட்சிகள் மேற்கோள் காட்டி அவற்றை அகற்ற வலியுறுத்தினர்.

தூத்துக்குடி எம்எல்ஏ கீதாஜீவன் அதிகாரிகளை தொடர்புகொண்டு மறைந்த தலைவர்களின் சிலைகளை மூடி வைத்திருப்பதை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இந்நிலையில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி.எஸ்.முரளிதரன் நேற்று காலை பழைய மாநகராட்சி வளாகத்தில் மூடி வைக்கப்பட்டிருந்த மறைந்த தலைவர்களின் சிலை அருகில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து அதிகாரிகள் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு சென்று சிலையை மூடி இருந்த துணிகளை அகற்றி சிலையை பொதுமக்கள் பார்ப்பதற்காக திறந்து வைத்தனர்.

Related Stories: