×

சமூக ஊடகங்களில் தேர்தல் விதி மீறி பிரசாரம் செய்தால் வழக்கு பதிவு

தூத்துக்குடி, மார்ச் 20: சமூக ஊடகங்களில் விதிகளை மீறி தேர்தல் பிரசாரம் செய்தால் வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி:தூத்துக்குடி மக்களவை தொகுதிக்கு முதல் நாளில் யாரும் வேட்புமனுத்தாக்கல் செய்யவில்லை. வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை கண்காணிக்க 2 தேர்தல் செலவின பார்வையாளர்கள் வந்துள்ளனர். தூத்துக்குடி தொகுதிக்கு ஒரு பொது பார்வையாளராக பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சீமா ஜெயின் என்ற ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் வரும் 25ம் தேதி வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், விளாத்திகுளம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கு பொது பார்வையாளராக ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த மாதவி லதா என்ற ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். அவரும் வரும் 25ம் தேதி வருவார்.

 தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ள சி-விஜில் செயலி குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தேர்தல் தொடர்பான புகார்களை, விதிமுறை மீறல் குறித்த புகைப்படங்கள், வீடியோக்களை இந்த செயலியில் பதிவேற்றம் செய்யலாம். தூத்துக்குடி தொகுதி வாக்காளர்களும் இந்த செயலி மூலம் பல்வேறு புகார்களை தெரிவித்து வருகின்றனர். இந்த புகார்கள் உடனுக்குடன் சரி செய்யப்படுகின்றன. சமூக ஊடகங்களை பொறுத்தவரை வேட்பாளர்கள் விளம்பரம் செய்ய வேண்டுமானால், முன்கூட்டியே மீடியா சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் சான்றிதழ் பெற்றே வெளியிட வேண்டும். குழுவிடம் அனுமதி பெறாமல் விளம்பரங்களை வெளியிட்டால், அதற்கான கட்டணம் கூகுள், பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற நிறுவனங்களிடம் இருந்து பெற்று, சம்பந்தப்பட்ட வேட்பாளர்களின் தேர்தல் செலவு கணக்கில் சேர்க்கப்படும்.மேலும், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி சாதி, மத ரீதியாகவோ, மற்ற வேட்பாளர்களை தனிப்பட்ட முறையில் அவதூறாக பேசியோ சமூக ஊடகங்களில் வெளியிட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : election campaign ,
× RELATED திருவாரூர் அருகே கொரடாச்சேரியில்...