தூத்துக்குடியில் ரயிலில் அடிபட்டு சிறப்பு எஸ்.ஐ பலி

தூத்துக்குடி,மார்ச் 20: தூத்துக்குடியில் ரயிலில் அடிபட்டு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பலியானார். அவர் உயரதிகாரிகள் டார்ச்சரால் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? என ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், மணியாச்சி காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்ஐயாக பணியாற்றி வந்தவர் மால்கம் (52). தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு காந்திநகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் தூத்துக்குடி மீளவிட்டான் செல்லும் ரயில்வே இருப்பு பாதையில் தனியார் பள்ளி அருகே நேற்று முன்தினம் இரவு ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார்.  தகவலறிந்து தூத்துக்குடி ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உடலுக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த அவரது பைக்கையும் மீட்டனர்.

 பலியான மால்கம் ஸ்டெர்லைட் பிரச்னை குறித்த சிறப்பு விசாரணை குழுவில் இடம் பெற்றிருந்தார். இதனால் அவர் தூத்துக்குடியில் தங்கி இருந்து வந்தார். அவர் நேற்று முன் தினம் இரவு வழக்கு விசாரணை தொடர்பாக அப்பகுதிக்கு சென்றபோது ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற நிலையில் கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டிருக்கலாம் என்று ரயில்வே போலீசார் கருதுகின்றனர். பலியான மால்கம் கடந்த 1993ம் ஆண்டு போலீஸ்காரராக தேர்வாகி 9.6.1993ல் பணியில் சேர்ந்தார். கடந்த ஆண்டு சிறப்பு எஸ்ஐயாக பதவி உயர்வு பெற்றார். இவரது மனைவி மேகலா, தூத்துக்குடி கால்டுவெல் காலனியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். மகள் மேக்தலின் கோவையில் உள்ள கல்லூரியிலும், மகன் மரியோ தூத்துக்குடியில் 10ம் வகுப்பும் பயின்று வருகின்றனர். இதற்கிடையே மால்கம் ரயிலில் தவறி அடிபட்டு பலியானார் என்று ரயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆனால் அவர் மேலதிகாரிகள் டார்ச்சர் காரணமாக ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. ரயிலில் அடிபட்டு சிறப்பு எஸ்ஐ பலியான சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: