வழக்கு வாபஸ் ஆனதால் ஓட்டப்பிடாரம் தொகுதி சிக்கல் தீர்ந்தது

ஓட்டப்பிடாரம், மார்ச் 20: ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் தொடர்பாக நடந்து வந்த வழக்கை புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வாபஸ் பெற்றதை தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கடந்த 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஓட்டப்பிடாரம் தொகுதியில் அதிமுக சார்பில் சுந்தர்ராஜனும், புதிய தமிழகம் கட்சி சார்பில் டாக்டர் கிருஷ்ணசாமியும் போட்டியிட்டனர். இதில் 493 வாக்குகள் வித்தியாசத்தில் கிருஷ்ணசாமி தோல்வியடைந்தார். அதிமுக வேட்பாளர் சுந்தர்ராஜன் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது என்று கூறி இந்த வெற்றியை எதிர்த்து டாக்டர் கிருஷ்ணசாமி வழக்கு தொடர்ந்தார். வேட்பு மனு தாக்கலின் போது அரசு மணல் குவாரி ஒப்பந்தத்தை மறைத்தும், தேர்தலில் அதிகார துஷ்பிரயோகம் செய்தும் அதிமுக வேட்பாளர்  சுந்தர்ராஜன் வெற்றி பெற்றதாக கிருஷ்ணசாமி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்தது.

 இந்நிலையில் எம்எல்ஏவாக இருந்த சுந்தர்ராஜன், டிடிவி தினகரன் அணிக்கு தாவினார்.  மேலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கவர்னரிடம் மனு அளித்த 18 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்த விவகாரத்தில் ஓட்டப்பிடாரம் எம்எல்ஏவாக இருந்த சுந்தர்ராஜனும் தனது பதவியை இழந்தார். இந்நிலையில் கடந்த 10ம் தேதி தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிப்பினை வெளியிட்டது. ஆனால் ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடத்துவதற்கு நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் கூறி அந்த தொகுதிகளில் மட்டும் இடைத்தேர்தல்களை ஒத்திவைத்தது. இதை எதிர்த்து திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.  இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த டாக்டர் கிருஷ்ணசாமி தற்போது அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளார். அவருக்கு கூட்டணி கட்சியில் நாடாளுமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியை அதிமுக ஓதுக்கியுள்ளது.

ஓட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவியதற்கு ‘அதிமுகவின் அதிகார துஷ்பிரயோகம் தான் காரணம்' என வழக்கு தொடர்ந்த புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி மதுரை உயர் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்தார்.

 அதில் ஓட்டப்பிடாரம் தொகுதியில் தேர்தல் செல்லாது என தான் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற அனுமதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். மேலும் இந்த வழக்கை ரத்து செய்து ஓட்டப்பிடாரம் தொகுதியில் தேர்தல் நடத்தவும் உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, டாக்டர் கிருஷ்ணசாமி மனுவின் அடிப்படையில் ஓட்டப்பிடாரம் தேர்தல் வழக்கை முடித்து வைப்பதாக உத்தரவிட்டார். மேலும் அத்தொகுதியில் தேர்தல் தொடர்பான வழக்கு எதுவும் இல்லாததால் தேர்தல் ஆணையம் அதன் நடைமுறைப்படி இடைத்தேர்தல் நடத்த முடிவெடுக்கலாம் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவால் ஓட்டப்பிடாரம் தெகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என தெரிகிறது. இதனால் திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சி தொண்டர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: