×

திருவண்ணாமலையில் பரபரப்பு கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை கோரி

திருவண்ணாமலை, மார்ச் 20: வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள கீழாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சுகப்பிரியா. இவர் நேற்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தார். அப்போது, திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணை கேனை எடுத்து கலெக்டர் கார் நிறுத்தும் இடத்தில் தன்மீது மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். பின்னர் சுகப்பிரியா தனது கோரிக்கை மனுவினை மனு பெட்டியில் செலுத்தினார். இதையடுத்து போலீசார் அவரை கிழக்கு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எனக்கும் திருவண்ணாமலை வேல்நகர் முதலாவது குறுக்கு தெருவை சேர்ந்த டாக்டர் மணிகண்டன் என்பவருக்கும் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் நடந்தது. அப்போது வரதட்சணையாக எனக்கு 30 சவரன், கணவருக்கு 10 சவரன் மற்றும் சீர்வரிசை பொருட்களை எனது பெற்றோர் வழங்கினர்.

தொடர்ந்து எனக்கு வளைகாப்பு நடத்தியபோது, எனது வீட்டிலிருந்து ₹5 லட்சம் பெற்று வரவேண்டும் என எனது மாமனார், மாமியார் கூறினார். ஆனால் எனது பெற்றோரால் ₹3 லட்சம் மட்டும் தான் ெகாடுக்க முடிந்தது. பின்னர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. என் தாய் வீட்டிலிருந்து என்னையும் எனது குழந்தையும் கடந்த ஜனவரி மாதம் எனது கணவர் மற்றும் பெரிய மாமனார் மற்றும் அவர்களது உறவினர்கள் வந்து அழைத்து வந்தனர்.எனது குழந்தைக்கு எனது பெற்றோர் வீட்டில் 2 சவரன் நகை அணிவித்து அனுப்பி வைத்தனர். ஆனால், எனது மாமியார் வீட்டார் கூடுதலாக நகை கேட்டு பேசினர். அதற்கு எனது தந்தையால் முடியாது என தெரிவித்தேன். அதற்கு, எனது மாமனார், மாமியார் மற்றும் கணவர் ஆகியோர் என்னை குழந்தையுடன் வீட்டிலிருந்து வெளியே அனுப்பி ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும், எனது கணவருக்கு வேறு திருமணம் செய்து வைத்துவிடுவோம் என தெரிவித்தனர்.இதுகுறித்து தகவலறிந்த எனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடனடியாக திருவண்ணாமலைக்கு வந்து எனது கணவர் வீட்டாரிடம் தட்டிக்கேட்டனர். மேலும் திருவண்ணாமலை மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தோம். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி எங்களை சமரசம் செய்து வைத்தனர்.இருப்பினும், மீண்டும் எனது மாமியார் குடும்பத்தினர் தொடர்ந்து பிரச்னையை ஏற்படுத்தி வருகின்றனர். எனவே வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, எனது கணவருடன் சேர்ந்து வாழ உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

Tags : fire collector ,office ,demand action ,victims ,Thiruvannamalai ,
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...