×

வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அதிகாரிகள் சோதனையில் ₹6.07 லட்சம் சிக்கியது 300 சால்வை பறிமுதல்

வேலூர், மார்ச் 20:வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் கணக்கில் வராத ₹6.07 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டு அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.காட்பாடி காந்தி நகரில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரின் டேஷ்போர்டில் இருந்த ₹1 லட்சத்து 10 ஆயிரத்தை கைப்பற்றினர். இதையடுத்து காரை ஓட்டி வந்த காட்பாடி காந்தி நகரை சேர்ந்த மணிவண்ணனிடம் நடத்திய விசாரணையில், சொந்த வேலை காரணமாக சென்னைக்கு ₹1 லட்சத்து 10 ஆயிரத்தை கொண்டு செல்வதாக கூறினார். ஆனாலும், உரிய ஆவணங்களை சமர்ப்பித்த பின்னர் பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு கூறி அதனை தாசில்தாரிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து கலெக்டர் அலுவலகம் அருகே சர்வீஸ் சாலையில் தேர்தல் பறக்கும்படையினர் நடத்திய வாகன சோதனையில், சென்னை போரூரை சேர்ந்த பிரேம்குமாரிடம், ஆவணங்கள் இல்லாத ₹1 லட்சத்து 8 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

அதேபோல், வேலூரை சேர்ந்த லாட்ஜ் உரிமையாளர் சொக்கநாதன் என்பவரது காரில் ₹70 ஆயிரத்து 270 கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது அவ்வழியாக காரில் வந்த சேவூரை சேர்ந்த சகுந்தலா என்பவரிடம் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ₹52 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். இதேபோல் தேர்தல் பிரிவு அலுவலர் நடராஜன் தலைமையிலான குழுவினர் ஊசூர் ஜமால்புரத்தில் மேற்கொண்ட வாகன சோதனையில் கமல் என்பவரிடம் கணக்கில் வராத ₹67 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல், வாணியம்பாடி அம்மூர்பேட்டை பகுதியில் பறக்கும் படை குழுவினர் நடத்திய வாகன சோதனையில், சீனிவாசன் என்பவரிடம் ₹2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில், அரக்கோணம் - திருத்தணி நெடுஞ்சாலையில், இரட்டை குளம் செக்போஸ்ட் அருகே நேற்று அதிகாலை நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். இதில், பண்டல் பண்டலாக ₹50 ஆயிரம் மதிப்பிலான 300 சால்வைகள் இருந்தது. மேலும், முறையான பில் ஆவணங்களின்றி சால்வை எடுத்து வந்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சால்வைகளை பறிமுதல் செய்து அரக்கோணம் தாசில்தார் ஜெயக்குமாரிடம் ஒப்படைத்தனர்.

Tags : Vellore district ,places ,examination ,
× RELATED ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில்...