×

வேலூர், அரக்கோணம் தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் முதல் நாளில் வெறிச்சோடியது 12 மனுக்கள் மட்டுமே வினியோகம்

வேலூர், மார்ச் 20: வேலூர், அரக்கோணம் தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் முதல் நாளில் வெறிச்சோடியது. 12 மனுக்கள் மட்டுமே வினியோகம் செய்யப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர், அரக்கோணம் மக்களவை தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தொடங்கியது. வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலராக கலெக்டர் ராமன், அரக்கோணம் மக்களவை தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலராக டிஆர்ஓ பார்த்தீபன் நியமிக்கப்பட்டிருந்தனர். வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் 2 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் நடைபெறுவதால், 3 டிஎஸ்பிக்கள் தலைமையில் 15 இன்ஸ்பெக்டர்கள், 40 எஸ்ஐக்கள், போலீசார் உட்பட 300 பேர் கொண்ட 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்தல் நடத்தும் அதிகாரிகளான கலெக்டர் ராமன், டிஆர்ஓ பார்த்தீபன் ஆகியோர் காலை 11 மணியளவில் மனுக்களை பெறுவதற்கு தயார் நிலையில் இருந்தனர். ஆனால் முதல் நாளான நேற்று செவ்வாய்க்கிழமை என்பதால் யாரும் மனு தாக்கல் செய்ய வரவில்லை. இதனால் கலெக்டர் அலுவலகமே வெறிச்சோடி காணப்பட்டது. அதேசமயம், முதல்நாளில் மனு தாக்கல் ஏதும் செய்யப்படவில்லை. அதேநேரத்தில் வேலூர் மக்களவை தொகுதிக்கு 3 மனுக்களும், அரக்கோணம் மக்களவை தொகுதிக்கு 9 மனுக்களும் பெற்றுச்சென்றனர். மனு தாக்கல் வரும் 26ம் தேதி வரை வேலை நாட்களில் மட்டும் நடக்கிறது. 2வது நாளான(இன்று) புதன்கிழமை என்பதால் பெரும்பாலானவர்கள் மனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாக்ஸ்...
3 சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கு யாரும் வரவில்லைவேலூர் மாவட்டத்தில் ஆம்பூர், குடியாத்தம், சோளிங்கர் ஆகிய 3 சட்டபேரவை தொகுதி இடைதேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று துவங்கியது. ஆம்பூரில் தாலுகா அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்திருந்தனர். ஆம்பூர் டிஎஸ்பி சச்சிதானந்தம் தலைமையில் 46 போலீசார் ஈடுபட்டிருந்தனர். ஆம்பூர் சட்டபேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட வழங்கல் அலுவலருமான பேபி இந்திரா தலைமையிலான தேர்தல் பணி அலுவலர்கள் வேட்பு மனுக்களை பெற காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை காத்திருந்தனர்.

ஆனால், செவ்வாய்க்கிழமை என்பதால் வேட்பு மனு தாக்கல் செய்ய முக்கிய கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட யாரும் வேட்பு மனு தாக்கல் செய்ய வரவில்லை. இதனால் முதல் நாளான நேற்று வெறிச்சோடியது. குடியாத்தம் சட்டபேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் பேரணாம்பட்டு தாலுகா அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் யாரும் வேட்புமனு தாக்கல் செய்ய வரவில்லை. இதேபோல் சோளிங்கர் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நெமிலி தாலுகா அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அங்கு நேற்று யாரும் வேட்புமனு தாக்கல் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Vellore ,Arakkonam ,
× RELATED வேலூர் அருகே முன்னாள் பஞ்சாயத்து...