×

கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் தொடக்கம்

நாகர்கோவில், மார்ச் 20:  கன்னியாகுமரி மக்களவை தொகுதி தேர்தல் வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில் கலெக்டர் அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 18ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. வரும் 26ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடக்கிறது. வரும் 27ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடக்கிறது. வேட்பு மனுக்களை திரும்பப்பெற வரும் 29ம் தேதி கடைசி நாளாகும்.
குமரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவலராக மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே இருந்து வருகிறார். நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டு அதிகாரிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் வேட்புமனு விண்ணப்பங்களும் போதிய அளவில் கொண்டு வரப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ளன. நேற்று வேட்பு மனு விண்ணப்பங்களை வேட்பாளர்களின் முகவர்கள் பெற்று சென்றனர்.

 அரசியல் கட்சிகள் முழுமையாக வேட்பாளர்களை அறிவிக்காததால் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்ய இன்னும் ஓரிரு நாட்கள் ஆகலாம் என தெரிகிறது. அதன்பிறகே வேட்புமனு தாக்கல் சூடு பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.வேட்பு மனு தாக்கல் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கிய நிலையில் கலெக்டர் அலுவலகம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அலுவலகத்திற்குள் நுழைய இரு வாசல்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்து வருகின்ற நிலையில் கலெக்டர் அலுவலகத்தில் அரசியல் கட்சியினரின், வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. பேரிகார்டுகள் வைக்கப்பட்டு போலீசார் தடுப்பு பணிகளில் ஈடுபட்டனர். ஏஎஸ்பி ஜவஹர் தலைமையில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். வேட்பாளருடன் ஐந்து பேருக்கு மேல் அனுமதியில்லை என்றும் போலீஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.முதல் நாளான நேற்று அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சைகள் என 8 பேர் ேவட்பு மனுக்களுக்கான விண்ணப் பங்கள் வாங்கி சென்றனர்.

முறைப்படி வெளியானது அறிவிப்பு
தேர்தல் தொடர்பான அறிவிப்பு நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள விளம்பர பலகையில் முறைப்படி ஒட்டப்பட்டிருந்தது. அதன் விபரம் வருமாறு:கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் இருந்து மக்களவைக்கு ஓர் உறுப்பினரை தேர்ந்ெதடுக்க தேர்தல் நடக்கவிருக்கிறது. வேட்பாளர் அல்லது அவரது பெயரை முன்மொழிபவர்களில் ஒருவர் தேர்தல் நடத்தும் அதிகாரியிடத்தில் அல்லது நாகர்கோவில் சப் கலெக்டரிடம் நாகர்கோவில் மாவட்ட கலெக்டர் அறையில் அரசு விடுமுறையில்லாத ஒரு தினத்தில் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மார்ச் 26ம் தேதிக்கு பிற்படாமல் நியமன சீட்டுகளை கொடுத்துவிடலாம். நியமன சீட்டு பிரதிகள் இங்கு கிடைக்கும்.

நியமன சீட்டுகள் நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மார்ச் 27ம் தேதியன்று காலை 11 மணிக்கு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும். வேட்பாளர் அல்லது அவரது பெயரை முன்மொழிபவர்களில் ஒருவர் அல்லது வேட்பாளரால் எழுத்து மூலம் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள அவரது தேர்தல் முகவர், வேட்பாளர் விலகல் அறிவிப்பை தேர்தல் அதிகாரிகள் எவரிடத்திலேனும் நாகர்கோவில் மாவட்ட கலெக்டர் அறையில் மார்ச் 29ம் தேதி மாலை 3 மணிக்குள் கொடுத்துவிடலாம். தேர்தலில் போட்டியிருந்தால் ஏப்ரல் 18ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்கெடுப்பு நடத்தப்படும். இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : constituency ,Kanyakumari Lok Sabha ,
× RELATED கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில்...