×

சத்துமாவு வழங்கும் திட்டத்தில் முறைகேடு?

திருவள்ளூர், மார்ச் 20: அங்கன்வாடி மையங்களில், குழந்தைகள், வளர்இளம் பெண்களுக்கு வழங்கப்படும் சத்துமாவு, பயனாளிகளை சென்றடையாமல் கால்நடை தீவனத்திற்காக முறைகேடாக விற்கப்படுவதாக புகார்  எழுந்துள்ளது.ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் சார்பில், திருவள்ளூர் மாவட்டத்தில், 1,688 அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன. இதில், இரண்டு வயதில் இருந்து ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு, முப்பருவ கல்வி  முறையின் அடிப்படையில், அடிப்படை கல்வி கற்பிக்கப்படுகிறது.
இதுதவிர, வளர்இளம் பெண்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் என சத்துமாவு வழங்கப்படுகிறது. இந்த சத்துமாவு வழங்கும் திட்டம், கிராமப்பகுதிகளில் உரிய பயனாளிகளுக்கு சென்றடையவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.இதுதவிர, மாவட்டத்தில் உள்ள 14 திட்ட மையங்களில், சத்துமாவு வழங்கும் திட்டத்தில் முறைகேடு நடப்பதாக கூறப்படுகிறது. இங்கு வழங்கப்படும் சத்துமாவு, பெரும்பாலான தாய்மார்கள், அங்கன்வாடிகளுக்கு சென்று பெற்றுக்  கொள்ளாததால், கால்நடைகளுக்கு ஊட்டப்பொருளாக, குறிப்பிட்ட தொகைக்கு அங்கன்வாடி பணியாளர்கள்விற்றுவிடுவதாகவும் புகார் எழுந்துள்ளது.இதுகுறித்து ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஒருவர் கூறுகையில், ‘சத்துமாவு வழங்கும் திட்டம் தொடர்பாக புகார் எதுவும் வரவில்லை. மேலும், அங்கன்வாடிகளில் திட்டப் பணியாளர்களால் அவ்வப்போது  ஆய்வு செய்யப்படுகிறது. கிராமப்புற பகுதிகளில் இதுபோன்ற பிரச்னைகள் இருப்பின் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’  என்றார்.



Tags :
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...