×

வேட்பு மனுத்தாக்கல் நேற்று தொடங்கியது வெறிச்சோடி காணப்பட்ட காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம்

காஞ்சிபுரம், மார்ச் 20: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. ஆனால், வேட்புமனு பெறும் கலெக்டர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. ஆனாலும், பாதுகாப்பு ஏற்பாடுகள்  தீவிரமாக செய்யப்பட்டுள்ளன.
இந்தியா முழுவதும் 7 கட்டமாக நடைபெற உள்ள மக்களவை தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி முதல் தொடங்குகிறது. இதையொட்டி, ஏப்ரல் 18ம் தேதி 2ம் கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் 40 தொகுதிகளில் தேர்தல்  நடைபெறுகிறது. அதேபோல் தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் அதே 18ம் தேதி நடைபெற உள்ளது.இதைதொடர்ந்து, 2ம் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று தொடங்கியது. இதையொட்டி, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளன. கலெக்டர் அலுவலக வாயிலில்  போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் வேட்புமனுத்தாக்கல் செய்ய வரும் வேட்பாளரின் வாகனங்கள் வெளியில் நிறுத்துவதற்காக அண்ணா காவல் அரங்கில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் அலுவலக வாயிலில் 10 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, அப்பகுதி முழுவதும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி (தனி) தொகுதிக்கு  மார்ச் 19 முதல் மார்ச் 26ம் தேதிவரை மார்ச்  23 மற்றும் 24ம் தேதி நீங்கலாக, கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மற்றும் காஞ்சிபுரம் (தனி) நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பொன்னையா, வேட்பு மனுக்கள் பெற்று கொள்வார்.மேலும் கூடுதலாக  முதன்மை உதவி தேர்தல் அலுவலராக காஞ்சிபுரம் சார் ஆட்சியர் சரவணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேவைப்பட்டால், முதன்மை உதவி தேர்தல் நடத்தும் அலுவலரால் காஞ்சிபுரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் காலை 11  மணிமுதல் மாலை 3 மணிவரை வேட்பு மனுக்கள் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு நேற்று 7 வேட்புமனுக்கள் வாங்கி செல்லப்பட்டுள்ளன.பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்கு மார்ச் 19 முதல் மார்ச் 26 வரை, மார்ச் 23 மற்றும் 24ம் தேதி நீங்கலாக  கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தில் ஆர்டிஓ மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலரான சுந்தரமூர்த்தி வேட்பு மனுக்கள் பெற்று கொள்வார்.கூடுதலாக மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நில எடுப்பு) முதன்மை உதவி  தேர்தல் அலுவலராக நாராயணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார், தேவைப்பட்டால், பெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலகம், வேட்பு மனுக்கள் முதன்மை உதவி தேர்தல் அலுவலரால் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை  வேட்பு மனுக்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் பெரும்புதூர் தொகுதிக்கு செவ்வாய்க்கிழமை 14  வேட்பு மனுக்கள் வாங்கி செல்லப்பட்டுள்ளன.வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது செவ்வாய்க்கிழமை என்பதால் வேட்பாளர்கள் யாரும் நேற்று வேட்பு மனுத்தாக்கல் செய்ய ஆர்வம் காட்டவில்லை. மேலும் திமுக, அதிமுக ஆகிய பிரதான கட்சிகளும் வெள்ளிக்கிழமை  வேட்புமனுத்தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளன.திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தவிர்த்து மற்ற கட்சிகள் இன்று முதல் வேட்பு மனுத் தாக்கல் செய்யும் என்பதால், கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் களைகட்ட தொடங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : candidature ,office ,Kanchipuram Collector ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...