×

நீலமங்கலம் ஊராட்சியில் கண்டு கொள்ளாத அதிகாரிகள் பைப்லைன் உடைந்து வீணாக வெளியேறும் குடிநீர்

செய்யூர், மார்ச் 20: நீலமங்கலம் கிராமத்தில், சாலையோரத்தில் உள்ள பைப்லைனில் உடைப்பு ஏற்பட்டு, கடந்த பல நாட்களாக குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. இதனை சரி செய்ய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும்  எடுக்காமல் உள்ளனர். இதனால், அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.லத்தூர் ஒன்றியம் நீலமங்கலம் ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. நீலமங்கலம் ஏரியின் அருகே அமைக்கப்பட்டுள்ள கிணற்றில் இருந்து மின் மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து, நீலமங்கலம் பஞ்சாயத்து  அலுவலகம் அருகே உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு அனுப்பப்படுகிறது. பின்னர், வீடுகளுக்கு பைப் லைன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.கடந்த சில மாதங்களுக்கு முன் தினமும் காலையில் ஒரு மணிநேரம் தண்ணீர் வினியோகிக்கப்பட்டது. தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால், நிலத்தடி நீர் குறைந்து வருகிறது. இதையொட்டி, 2 நாட்களுக்கு ஒருமுறை  குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

ஏரியில் இருந்து செல்லும் தண்ணீர், கொண்டு செல்லும் பைப்லைன், தச்சூர் கூட்ரோட்டில் இருந்து நீலமங்கலம் கிராமம் செல்லும் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ளது.கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த பைப்பு லைனில் பழுது ஏற்பட்டது. இதனால், குடிநீர் விநியோகம் செய்யும் நேரங்களில் இந்த பைப்பு லைனில் குடிநீர் கசிந்து வீணாக வெளியேறி சாலையோரத்தில் வழிந்தோடுகிறது.கடந்த பல நாட்களாக குடிநீர் வீணாக சாலையில் ஓடுவதை தடுத்து, பைப்லைனை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள், ஊராட்சி நிர்வாகத்திடமும், ஒன்றிய நிர்வாக அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தனர். ஆனால்  அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இந்த நேரத்தில், பைப்லைனில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வீணாக வெளியேறுவதை தடுக்க அதிகாரிகள் உய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.


Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...