நிழற்குடை இல்லாததால் வெயிலில் காயும் பயணிகள்

திருப்பூர்,மார்ச்19: திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில், ரோடு அகலப்படுத்தும் பணிக்காக அகற்றப்பட்ட நிழற்குடை பல ஆண்டுகள் ஆகியும், மீண்டும் அமைக்கப்படவே இல்லை. இந்நிலையில், தற்போது கோடை வெயில் சுட்டெரிக்க துவங்கி உள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருப்பூரில் உள்ள பனியன் தொழிற்சாலைகளில் பணியாற்றுவதற்காக, தினமும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் வெளியூர்களில் இருந்து வந்து செல்கின்றனர். மேலும், பயணிகள் ரயில் மூலமாகவும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். உள்ளூரில் இருந்தாலும், பனியன் நிறுவனங்களுக்கு செல்ல பஸ்களையும் பயன்படுத்தி வருகின்றனர்.  தினமும் காலை, மாலை நேரங்களில் பஸ் ஸ்டாண்ட் மற்றும் பஸ் ஸ்டாப் பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதும். இந்நிலையில், கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பல்லடம் ரோடு, தாராபுரம் ரோடு, ஊத்துக்குளி ரோடு, காங்கயம் ரோடு, அவிநாசி ரோடு, பி.என்., ரோடு, மங்கலம் ரோடு ஆகிய பிரதான ரோடுகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, ரோடு அகலப்படுத்தப்பட்டது. அப்போது, பேருந்து நிறுத்தங்களில் அமைக்கப்பட்டிருந்த நிழற்குடைகள் அகற்றப்பட்டன. நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் மறுபடியும் நிழற்குடைகள் அமைக்கப்படவில்லை. முக்கிய ரோடுகள் அனைத்திலும் தனியார் நிறுவனங்கள், தன்னார்வ பொதுநல அமைப்புகள், ரோட்டரி மற்றும் லயன்ஸ் கிளப்புகள் அமைத்துக் கொடுத்த நிழற்குடைகள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் என பல்வேறு தரப்பினர் பலமுறை மனு கொடுத்தும், நேரில் கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ‘ இந்நிலையில் தற்போது, கோடை வெயில் சுட்டெரிக்க துவங்கி உள்ள நிலையில், பல இடங்களில் நிழற்குடைகள் இல்லாததால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

Related Stories: