ஆத்தூர் கூட்டுறவு சங்கத்தில் 18ஆயிரம் மூட்டை பருத்தி ₹3.50 கோடிக்கு ஏலம்

ஆத்தூர், மார்ச் 19:  ஆத்தூர் புதுப்பேட்டையில் உள்ள வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாரம் தோறும் திங்கட்கிழமை இரவு பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். நேற்று நடந்த ஏலத்தில் ஆத்தூர், நாமக்கல், பெரம்பலூர், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 1600 விவசாயிகள், 18ஆயிரம் பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். கோவை, ஈரோடு, சேலம், கும்பகோணம், புதுக்கோட்டை, அன்னூர் பகுதியை சேர்ந்த மில் உரிமையாளர்கள் உள்ளிட்ட 30 வியாபாரிகள் கலந்து கொண்டு, பருத்தியை ஏலத்தில் எடுத்தனர். இதில், ஆர்சிஎச் ரகம் குவிண்டால் ₹4800 முதல் ₹5,849 வரையிலும், டிசிஎச் ரகம் ₹6,109 முதல் ₹7,269 வரையிலும் விலை போனது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் ஆர்சிஎச் ரக பருத்திக்கு ₹100 முதல் ₹200 வரை அதிகமாக விலை கிடைத்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மொத்தம் 18ஆயிரம் மூட்டை பருத்தி ₹3.50 கோடிக்கு ஏலம் போனது.

Related Stories: