×

உள்ளாட்சி அலுவலர்கள் மீது புகார் குப்பை கிடங்குகளில் ஏற்படும் தீயை அணைக்க ஒத்துழைப்பு தருவதில்லை

நாமக்கல், மார்ச் 19: குப்பை கிடங்குகளில் ஏற்படும் தீயை அணைக்க உள்ளாட்சி அலுவலர்கள் போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என நாமக்கல் மாவட்ட தீயணைப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.     இது குறித்து நாமக்கல் மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் அழகர்சாமி கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை, குப்பை கிடங்குகளில் சேகரிக்கப்படுகிறது. இந்த குப்பை கிடங்குகளில் தீ பிடித்தால், நாள் கணக்கில் எரிந்து வருகிறது. போதுமான தீயணைப்பு கருவிகள் இல்லாததால், குப்பை கிடங்குகளில் பற்றி எரியும் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால், குப்பை கிடங்குகளில் தீ பிடித்தால், தீயணைப்பு துறையினர் மட்டுமே வரவேண்டிய நிலை உள்ளது. இதனை தவிர்க்க, குப்பை கிடங்குகளில் தீ பிடித்தால் உடனே அணைக்க, தேவையான கருவிகளை வாங்கி வைக்க வேண்டும். கிடங்கிற்குள் தீயணைப்பு பைப்லைன் மற்றும் அதனை இயக்க தேவையான ஆட்களை  நியமனம் செய்ய வேண்டும். மலை போல் குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பையில் தீ பிடித்தால், அணைப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது.

தீயணைப்பு வாகனங்கள் குப்பைகளின் நடுபகுதிக்கு செல்ல ஏதுவாக, இடைவெளி விட்டு குப்பை கொட்ட வேண்டும். இது குறித்து நகராட்சி மற்றும் பேரூராட்சி அதிகாரிகளிடம் பலமுறை எடுத்து கூறியும், எந்தவிதமான ஒத்துழைப்பும் தருவதில்லை. பொதுமக்கள் தங்கள் பகுதியில் ஏற்படும் சிறு தீ விபத்துக்களை, தாங்களே அணைக்க முயற்சிக்க வேண்டும். எதற்கெடுத்தாலும் தீயணைப்பு துறையை அழைப்பதை தவிர்க்க வேண்டும். மிகச்சிறிய தீயை அணைக்க தினந்தோறும் தேவையற்ற தொலைபேசி அழைப்புகள் வருவதால், மற்ற பணிகள் பாதிக்கப்படுகிறது. கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில், இனி தீ விபத்துகள் அடிக்கடி ஏற்படும் என்பதால், பொதுமக்களும் போதிய ஒத்துழைப்பை வழங்க வேண்டும். இவ்வாறு தீயணைப்பு துறை அலுவலர் அழகர்சாமி கூறினார்.

Tags : garbage warehouses ,
× RELATED முத்துப்பேட்டையில் குப்பை கிடங்கு,...