×

வாட்டி வதைக்கும் வெயில் பாதிப்பை தடுக்கும் வழிமுறைகள்

கிருஷ்ணகிரி, மார்ச் 19:  தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வருகிறது. குழந்தைகள், பெரியவர்கள் கடும் பாதிக்குள்ளாகியுள்ளனர். பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியுள்ளது. வெயிலில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அதனை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் டாக்டர்கள் கூறியதாவது:
கொளுத்தும் வெயிலில் நடக்கும் மனிதர்களிடமிருந்து வெளிப்படும் உஷ்ணக்காற்று எளிதாக நோய்கிருமிகளை பரப்பி விடுகிறது. இதே போல், வெயில் காலத்தில் நோய்க்கிருமிகளின் பெருக்கமும் அதிகமாக இருக்கும். வெயில் காலத்தில் அதிகமாக சுரக்கும் வியர்வையால் உடலில் உப்புச்சத்து குறைந்து அடிக்கடி மயக்கம் வரும். குடிநீர் தொடர்ச்சியாக வராததால், குழாய்களில் மாசுபடிந்து அதன் மூலம் தலைவலி, வாந்திபேதி, அலர்ஜி போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதிகமாக வியர்வை சுரப்பதால் ஈரப்பதம் குறைந்து தோல் சம்மந்தப்பட்ட நோய்களும் பரவ வாய்ப்புள்ளது. இவை அனைத்தையும் விட, அம்மை நோய்களான சின்னம்மை, பெரியம்மை, சிக்கன்பாக்ஸ் போன்றவற்றின் தாக்குதல் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் அதிகமாக இருக்கும்.

பொதுவாக மழைக்காலத்திலும், வெயில் காலத்திலும் நீரை சார்ந்து தான் நோய்கள் பரவுகின்றன. மழைக்காலத்தில் கொசுக்கள் மூலம் நோய்கள் பரவினால், வெயில் காலத்தில் கிருமிகள் மூலம் நோய் பரவுகிறது. இதற்காக நாம் தண்ணீரை தினமும் நன்றாக காய்ச்சி கொதிக்க வைத்து, ஆறிய பின்பு குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மனிதனும் வழக்கத்தை விட அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். இப்படி குடிப்பதன் மூலம் அதிக வியர்வை சுரந்து, மயக்கம் வருவதை தவிர்க்கலாம். குளிர்சாதனப் பெட்டிகளில் வைத்து விற்கப்படும் குளிர்பானங்கள் மற்றும் குளிர்ந்த நீரில் மாசுப்படிவுகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே, முடிந்தவரை இதை தவிர்க்கலாம். இதற்கு பதில் தாகத்தை தணிக்க இளநீர், நுங்கு, மோர் போன்ற இயற்கை உணவுப் பொருட்களை வாங்கி உண்ணலாம். அழகு சாதன சோப்புகளை தவிர்த்து, கிருமிநாசினி சோப்புகளை போட்டு குளிக்கலாம். இதனால் வியர்வையில் இருந்து கிருமிகள் உருவாவது தவிர்க்கப்படும்.
இவ்வாறு டாக்டர்கள் கூறினர்.

Tags :
× RELATED மாவட்டத்தில் பரவலாக மழை