நாங்குநேரியில் ரயிலில் அடிபட்டு பெண் பலி

நாங்குநேரி, மார்ச் 19: நாகர்கோவிலில் இருந்து பெங்களூருக்கு எக்ஸ்பிரஸ் ரயில், நேற்றிரவு சென்று கொண்டிருந்தது. 8 மணியளவில் நாங்குநேரி ரயில் நிலையம் அருகே வந்தபோது, தண்டவாளங்களுக்கு இடையே பெண் உடல் சிதைந்து கிடப்பதை பார்த்து ஓட்டுநர் ரயிலை நிறுத்தினார். உடனடியாக நாங்குநேரி ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரயில்வே ஊழியர்கள் மற்றும் நாங்குநேரி போலீசார் விரைந்து சென்றனர். தலை சிதைந்த நிலையில் இறந்த கிடந்த பெண்ணுக்கு சுமார் 45 வயது இருக்கும் எனத் தெரிகிறது. 5 அடி உயரம் கொண்ட அவர் கரும்பச்சை நிற சேலையும், பச்சை நிற சட்டையும் அணிந்திருந்தார். ஒரு கவரில் பணமும் கிடந்தது. முகம் சிதைந்திருந்ததால் அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டது. ரயில்வே ஊழியர்கள், பெண் உடலை தண்டவாளத்தில் இருந்து வெளியே எடுத்து போட்டனர். அதன் பிறகே ரயில் புறப்பட்டு சென்றது.  

சுமார் ஒரு மணி நேரம் பெங்களூரு ரயில் நடுவழியில் நின்றதால் திசையன்விளை சாலையில் உள்ள ரயில்வே கேட் அடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி நாகர்கோவில் ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெளியூரை சேர்ந்தவரா? ரயிலில் அடிபட்டு இறந்த பெண், தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. நேற்று காலை முதலே ரயில் நிலையத்தையொட்டிய வயல் பகுதியில் அவர் சுற்றி வந்துள்ளார். சந்தேகமடைந்த விவசாயிகள், அப்பெண்ணிடம் விசாரித்தபோதும் பதில் எதுவும் தெரிவிக்கவில்லை. அவர் வெளியூரை சேர்ந்தவராக இருக்கலாம் என தெரிகிறது.

Related Stories: