வேட்பு மனு தாக்கல் இன்று துவக்கம் வேட்பாளர்கள் விதிமுறைகளை மீறக்கூடாது

தூத்துக்குடி, மார்ச் 19: நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கவுள்ள நிலையில் வேட்பாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் வேட்பாளர்களுக்கான தகுதி விவரங்களை டி.ஆர்.ஓ.வீரப்பன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் வேட்பு மனுதாக்கல் செய்வது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அவர் பேசியதாவது: நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர்கள் இன்று (மார்ச் 19) முதல் மார்ச் 26 வரை வேட்புமனுத்தாக்கல் செய்யலாம். மார்ச் 27ம் தேதி வேட்பாளர்களின் வேட்புமனுதாக்கல் பரிசீலனை செய்யப்படும், மார்ச் 29ம் தேதி வேட்பாளர்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெறலாம் எனவும், ஏப்ரல் 18ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும், மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தமிழகத்தில் 36வது தொகுதியாகும். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுதாக்கல் செய்ய வேண்டும் என்றால் இந்திய குடிமகனாகவும், 25 வயதிற்கு குறையாமலும் இருக்க வேண்டும். மேலும், ஏதேனும் ஒரு நாடாளுமன்ற தொகுதியில் வாக்காளராக பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தூத்துக்குடி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் முன்பு மனுதாக்கல் செய்யவேண்டும். அல்லது அவரால் நியமனம் செய்யப்பட்ட முதன்மை உதவி தேர்தல் அலுவலரிடம் மனுதாக்கல் செய்ய வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட தேசிய அல்லது மாநில அரசியல் கட்சி மற்றும் பதிவு செய்யப்பட்ட கட்சியின் சார்பாக நிறுத்தப்படும் வேட்பாளர்கள் தங்களை வேட்பாளர்களாக நியமனம் செய்த கட்சியிடமிருந்து பெற்ற படிவம் ஏ மற்றும் பி ஆகியவற்றை அசலாக கண்டிப்பாக வேட்புமனு தாக்கலின் போது தாக்கல் செய்ய வேண்டும். வேட்புமனுதாக்கல் செய்யும் அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் வேட்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் வாக்காளராக பதிவு செய்யப்பட்ட ஒரு நபர் முன்மொழிய வேண்டும். மற்ற வேட்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் வாக்காளராக பதிவு செய்யப்பட்ட தலா 10 நபர்கள் முன்மொழிய வேண்டும்.

 இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளபடி, வேட்புமனுவை 19ம் தேதி முதல் 26ம் தேதி வரை (விடுமுறை தினத்தை தவிர) காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை தாக்கல் செய்யலாம். வேட்புமனு தாக்கல் செய்ய கலெக்டர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் அறைக்குள் வேட்பாளருடன் 4 நபர்கள் (மொத்தம் ஐந்து நபர்கள்) மட்டுமே அனுமதிக்கப்படுவர். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும் ரூ.25,000 வைப்புத் தொகை செலுத்த வேண்டும். வேட்பாளர் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினராக இருந்தால் வைப்புத்தொகை ரூ.12,500, உரிய சாதி சான்றிதழ் கண்டிப்பாக தாக்கல் செய்ய வேண்டும். வேட்பாளர்கள் வேட்பு மனுவில் தாங்கள் தேர்தலில் போட்டியிட தகுதியுள்ளவர்கள் தான் என்பதை தெரிவிக்க வேண்டும்.

 போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுவுடன், முதல் வகுப்பு நீதிபதி அல்லது நோட்டரி பப்ளிக் முன்பாக வேட்பாளரால் உறுதிமொழி எடுக்கப்பட்டு சான்றளிக்கப்பட்ட பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். அபிடவிட் ரூ.20 மதிப்புள்ள ஸ்டாம்ப் பேப்பரில் இருக்க வேண்டும். அதில் அனைத்து விபரங்களும் கண்டிப்பாக பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும். இதற்கான படிவங்கள் கலெக்டர் அலுவலக தேர்தல் பிரிவில் இலவசமாக கிடைக்கும். பிரமாண பத்திரங்களில் பொய்யான தகவல்கள் அளித்தாலோ அல்லது உண்மையை வேண்டுமென்றே மறைத்தாலோ அல்லது கேட்கப்பட்ட தகவல்களையோ தருவதற்கு வேட்பாளர்கள் ஒருபோதும் மறுக்கக் கூடாது.

 வேட்பு மனுத்தாக்கல் செய்யும்போது, வேட்புமனு தாக்கல் செய்யும் இடத்திற்கு 3 வாகனங்களை தவிர மற்ற வாகனங்கள் 100 மீட்டர் தொலைவில் நிறுத்தி வைக்கப்படும்.  எனவே, வேட்புமனு தாக்கல் செய்யும் பணியில் அனைத்து வேட்பாளர்களும் விதிமுறைகளை முழுமையாக பின்பற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில், சப்-கலெக்டர் (பயிற்சி) அனு, தேர்தல் தனி வட்டாட்சியர் நம்பிராஜன் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: