மணப்பாறை அரசு மருத்துவமனையில் ஸ்கேன் பழுதை சரி செய்யாததால் ஏழை கர்ப்பிணி பெண்கள் அவதி தனியாரில் ரூ.700க்கு ஸ்கேன் எடுக்கும் அவலம்

திருச்சி, மார்ச் 19: மணப்பாறையில் புதுக்கோட்டை சாலையில் அரசு பொது மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு மணப்பாறை பகுதியைச்சுற்றியுள்ள பல்வேறு ஊராட்சி கிராமங்களை சேர்ந்த ஏழை, எளியோர், சிகிச்சை பெற்று வருகின்றனர்.  மணப்பாறை அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கும் கிராமப்புற பெண்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தினமும் 100க்கணக்கான கர்ப்பிணிகள் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு வந்து செல்கின்றனர். கர்ப்பிணிகளின் குழந்தையின் வளர்ச்சி மற்றும் உடல்நிலை குறித்து அரிய அவர்களுக்கு வயிறு பகுதியை ஸ்கேன் செய்து மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளிப்பது வழக்கம். 9 மாத கர்ப்பிணிகளுக்கு குழந்தைகள் வளர்ச்சியை துல்லியமாக கணித்து சிகிச்சை அளிப்பதற்கு இந்த ஸ்கேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனால் சுகப்பிரசவம் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில் மணப்பாறைஅரசு மருத்துவமனையில் ஸ்கேன் இயந்திரம் பழுதடைந்து ஒரு வாரம் கடந்த நிலையிலும் அது சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் தற்போது சிகிச்சைக்கு செல்லும் கர்ப்பிணிகளுக்கு மருத்துவர்கள் ஸ்கேன் செய்யாமலேயே சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் அங்குள்ள மருத்துவ செவிலியர்கள் கர்ப்பிணிகளிடம் ஸ்கேன் பழுதாகிவிட்டது. எனவே வெளியில் ஸ்கேன் எடுத்து வரும்படி அனுப்புகின்றனர்.

இதில் பணம் இல்லாத ஏழைகள் தனியார் மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்க வசதியின்றி மருந்து மாத்திரைகளை மட்டும் வாங்கிச்செல்கின்றனர். சிலர் தனியார் ஸ்கேன் சென்டரில் ரூ.500 முதல் ரூ.70 0வரை பணம் செலுத்தி ஸ்கேன் எடுத்து அதனை அரசு மருத்துவரிடம் சென்று காண்பித்து உரிய சிகிச்சை பெற்று செல்கின்றனர்.  பாமர ஏழைகள் அரசு மருத்துவமனை ஒன்றையே முழுவதும் நம்பி சிகிச்சைக்கு வருகின்றனர்.  ஆனால் மணப்பாறை அரசு மருத்துவமனையில் பழுதான ஸ்கேன் இயந்திரத்தை சரி செய்ய அலட்சியம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. இதனால் ஏழை கர்ப்பிணிகள் மருத்துவர்கள் தரும் மாத்திரைகளை வாங்கிகொண்டு ஸ்கேன் செய்யாமலேயே சென்றுவிடுவது வாடிக்கையாக மாறி உள்ளது. உரிய சிகிச்சை பெற முடியாமல் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக புலம்பி வருகின்றனர்.  எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் உடனடியாக ஸ்கேன் பழுதை சீரமைத்து ஏழை கர்ப்பிணி பெண்களுக்கு உதவிசெய்ய வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: