தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விழிப்புணர்வு துணை ராணுவ படையினர் 2வது நாளாக அணிவகுப்பு தீவிர வாகன சோதனை

திருச்சி, மார்ச் 19: திருச்சியில் மக்களவை தேர்தல் பாதுகாப்பு பணிக்கு வந்துள்ள துணை ராணுவ படையினர் நேற்று 2வது நாளாக அணிவகுப்பு நடத்தினர். தமிழகத்தில் மக்களவை தேர்தல் வருகிற ஏப்ரல் 18ம் தேதி நடைபெறுவதையொட்டி பறக்கும்படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இதில் ஆவணங்களின்றி எடுத்துச்செல்லப்படும் ரொக்கம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக துணை ராணுவபடையினர் தமிழகத்திற்கு வந்துள்ளனர். திருச்சிக்கு முதல் கட்டமாக உத்தரபிரதேச மாநிலம் பைசாபாத்தில் இருந்து இந்திய - திபெத் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த துணை ராணுவ வீரர்கள் டிஎஸ்பி ரமேஷ் சந்த் தலைமையில் 84 வீரர்கள் கடந்த 16ம் தேதி வந்தனர். இவர்கள் திருச்சி கே.கே.நகர் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் தங்கி உள்ளனர். பகுதி பகுதியாக பிரிந்து நேற்றுமுன்தினம் துணை ராணுவவீரர்கள் பணிகளில் ஈடுபட்டனர். மாநகர கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின்பேரில் மாநகரம் முழுவதும் வாகன தணிக்கையிலும், முக்கிய வாக்குச்சாவடி அடங்கிய பகுதிகளில் போலீஸ் அணிவகுப்பும் நடத்தினர். ரங்கம் உதவி கமிஷனர் ராமச்சந்திரன் தலைமையில் இந்திய- திபெத் எல்லை துணை ராணுவ படையினர் நேற்று திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் இருந்து ரங்கம் வரை அணிவகுப்பு நடத்தினர். தேர்தலுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பதை மக்கள் அறிந்து கொள்ளும் வண்ணம் இந்த அணிவகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories: