×

ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லாததால் பெற்றோர்கள் தர்ணா போராட்டம்

மணப்பாறை, மார்ச் 19:  விராலிமலை அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் போதிய ஆசிரியர்கள்  இல்லாததால் பெற்றோர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். விராலிமலை அடுத்த மீனவேலி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இந்த ஆண்டு 135 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். ஒரு தலைமையாசிரியரும், நான்கு ஆசிரியர்களும் நியமனம் செய்யப்பட்ட பள்ளியில் கடந்த மூன்று ஆண்டுகளாக இரண்டு ஆசிரியர்கள் தொடர்ச்சியாக பள்ளிக்கு வருவதில்லை. இதனால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் கல்வி பயிலும் வழக்கத்தை மறந்து சத்துணவிற்காக மட்டுமே பள்ளிக்கு செல்லும் அவலம் இருந்து வருவதாகவும், பள்ளியில் போதிய அடிப்படை வசதிகள் கூட இல்லை என்றும், போதிய ஆசிரியர்கள் இல்லாததால் குழந்தைகளின் கல்வி தரம் தாழ்ந்துள்ளதாகவும் பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து பலமுறை மாவட்ட கலெக்டரிடமும், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனையடுத்து நேற்று வழக்கம்போல் காலை பள்ளிக்கு சென்ற குழந்தைகள் போதிய ஆசிரியர்கள் இல்லாததால், பள்ளியை விட்டு வெளியே வந்து விளையாடியதில் இரண்டு சிறுவர்கள் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், பள்ளிக்கு போதிய ஆசிரியர்கள் வராததைக் கண்டித்து, வகுப்புகளுக்கு குழந்தைகளை அனுப்ப மறுத்து, பள்ளி முன் திரண்டனர். அப்போது பள்ளியின் உள்ளே பெற்றோர்கள் வரக்கூடாது என தலைமையாசிரியர் கூறியதையடுத்து அனைவரும் பள்ளி வாசலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் வகுப்பறைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விராலிமலை இன்ஸ்பெக்டர் மதன் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் சமரசபேச்சுவார்த்தை நடத்தி நாளை (இன்று) முதல் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags : Parents ,protest ,teachers ,Panchayat Union Primary School ,
× RELATED பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம்