பேராவூரணியில் இருந்து தொலைதூர அரசு பேருந்துகள் இயக்காததால் மக்கள் அவதி

பேராவூரணி, மார்ச் 19: பேராவூரணியில் இருந்து தொலைதூர அரசு பேருந்துகள் இயக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சை மாவட்டத்தின் கடைகோடியில் உள்ள பேராவூரணி தாலுகாவில் தொலைதூர பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் பயணம் செய்வதில் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். கோயம்புத்தூருக்கு பேராவூரணி சுற்றுவட்டார பகுதியிலிருந்து  வணிகர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் செல்கின்றனர். நேரடியாக அரசு பேருந்து இல்லாததால் தஞ்சாவூர், திருச்சி சென்றும், தனியார் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் கொடுத்தும் செல்லும் நிலை உள்ளது. பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பேராவூரணி  போக்குவரத்து பணிமனையில் இருந்து புதுக்கோட்டை, திருச்சி வழியாக திருப்பூர், கோயம்புத்தூரூக்கு அரசு பேருந்தும், இதேபோல் பேராவூரணியில் இருந்து பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் வழியாக திருச்சிக்கும், கிழக்கு கடற்கரை சாலையில் கட்டுமாவடி, மீமிசல், ராமநாதபுரம், தூத்துக்குடி வழியாக  திருச்செந்தூர் மற்றும் புதுக்கோட்டை, மணப்பாறை, திண்டுக்கல் வழியாக பழனிக்கும், வேலூர் வழியாக திருத்தணிக்கும், திருப்பதிக்கு நேரடியாக பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் இப்ராஹிம்ஷா கூறியதாவது: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது பேராவூரணியில் இருந்து 5 புதிய பேருந்துகள் தொலைதூர வழித்தடத்தில் இயக்கப்படுமென சட்டமன்றத்தில் அறிவித்தார். இதுவரை அறிவிப்பு செயல்படுத்தப்படவில்லை. போதிய பேருந்து வசதி இல்லாததால் பேராவூரணி நகரம் பக்கத்தில் உள்ள பட்டுக்கோட்டை, அறந்தாங்கி தாலுகாக்கள் வளர்ச்சியடைந்த அளவுக்கு வளர்ச்சியடையாமல் உள்ளது. எனவே தொலைதூர பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories: