பார்சல் அலுவலகங்களில் நிலையான கண்காணிப்பு குழுவினர் அதிரடி ஆய்வு ஆவணங்களுடன் இருந்த ஹாட்பாக்ஸ் திருப்பி ஒப்படைப்பு

தஞ்சை, மார்ச் 19: தஞ்சையில் பார்சல் அலுவலகங்களில் நிலையான கண்காணிப்பு குழுவினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது உரிய ஆவணங்களுடன் பார்சல் வந்த ஹாட்பாக்ஸ் திருப்பி கொடுக்கப்பட்டது. தஞ்சை நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி 24 மணி நேரமும் பறக்கும் படையினரும், நிலையான கண்காணிப்பு குழுவினரும் சோதனை நடத்தி வருகின்றனர். தஞ்சை நாடாளுமன்றத்தில் தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இதுதவிர மாவட்டத்தில் பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர் என்று 3 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த 3 சட்டமன்ற தொகுதிகளும் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்குள் அடங்கும். இருப்பினும் மாவட்டத்தில் மன்னார்குடி சட்டமன்ற தொகுதியை தவிர 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. எனவே இந்த 8 சட்டமன்ற தொகுதியிலும் தேர்தல் நடத்தை விதிமுறை மீறப்படுகிறதா, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா நடைபெறுகிறதா, விடுதிகள், திருமண மண்டபம் ஆகியவற்றில் வெளியூர்களில் இருந்து வெளியாட்கள் வந்து தங்கியுள்ளனரா, வெளியூர்களில் இருந்து அதிகாலை தஞ்சைக்கு வரும் பஸ்களில் ஏதாவது கொண்டு வரப்படுகிறதா என்பது குறித்து இந்த குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று நிலையான கண்காணிப்புக்குழு தாசில்தார் திருநாசுஜாதா தலைமையில் தஞ்சை வடக்குவீதியில் உள்ள பார்சல் அலுவலகத்தில் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டது. இதில் வெளியூர்களில் இருந்து வந்த பார்சல்கள், அந்த பார்சல்கள் எங்கிருந்து வந்தது, அதில் உள்ள பொருட்கள் என்ன, பர்சல் வந்து எத்தனை நாட்களாகிறது என்பது குறித்து 2 மணி நேரம் சோதனை நடத்தினார். இதில் ஒவ்வொரு அட்டை பெட்டியிலும் 6 ஹாட்பாக்ஸ் வீதம் 3 அட்டை பெட்டிகளில் 18 ஹாட்பாக்ஸ் இருப்பது தெரியவந்தது. உடனே இந்த பார்சல் எங்கிருந்து வந்தது, யாருக்கு செல்கிறது என்பது குறித்து பார்சல் அலுவலகத்தில் விசாரணை நடத்தினார. அப்போது அதற்கு உரிய ஆவணங்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த ஹாட்பாக்ஸ் திருப்பிகொடுக்கப்பட்டது. இதன்பின்னர் தஞ்சை பள்ளியக்ரஹாரம் பகுதியில் நின்று தஞ்சையை நோக்கி வந்த அரசு பஸ் மற்றும் தனியார் பஸ்கள், கார்களை நிறுத்தி சோதனை நடத்தப்பட்டது. சிலர் தங்களது கார்களில் கட்சி கொடி கட்டி வந்ததை அப்புறப்படுத்தினர். இதன்பின்னர் தஞ்சை ரயில் நிலையம், மகர்நோம்புச்சாவடி, கீழவாசல் ஆகிய பகுதிகளில் சோதனை நடத்தினர். இதில் சில இடங்களில் அரசியல் கட்சியினர் வரைந்த சுவர் விளம்பரம் அழிக்கப்பட்டாமலும், கொடி கம்பங்களில் கட்சி கொடிகள் பறந்து கொண்டும் இருந்தது. உடனே தஞ்சை மாநகராட்சி அலுவலகத்துக்கு தொடர்பு கொண்டு உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிடப்பட்டது.

Related Stories: