நாடாளுமன்றம், சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு இன்று முதல் வேட்புமனு தாக்கல் தயார் நிலையில் கலெக்டர், ஆர்டிஓ அலுவலகங்கள் வேட்பாளருடன் 5 பேருக்கு மட்டுமே அனுமதி

தஞ்சை, மார்ச் 19: தஞ்சை நாடாளுமன்றம், தஞ்சை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் இன்று துவங்குகிறது. இதையொட்டி கலெக்டர் அலுவலகம், ஆர்டிஓ அலுவலகங்கள் தயார் நிலையில் உள்ளது. தஞ்சை  நாடாளுமன்றம் மற்றும் தஞ்சை சட்டமன்ற இடைத்தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி  நடக்கிறது. இதற்காக வேட்புமனு தாக்கல் இன்று (19ம் தேதி) துவங்குகிறது.  வரும் 26ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடக்கிறது. தஞ்சை  நாடாளுமன்றத்துக்கு போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் தஞ்சை கலெக்டர்  அலுவலகத்திலும், தஞ்சை ஆர்டிஓ அலுவலகத்திலும் வேட்புமனுக்களை காலை 10 மணி  முதல் தாக்கல் செய்யலாம்.

அதேபோல் தஞ்சை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட  விரும்பும் வேட்பாளர்கள், தஞ்சை ஆர்டிஓ அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல்  செய்யலாம். வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளருடன் 5 பேர் மட்டுமே  வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவர். வேட்பாளருடன் வாகனங்களில்  வருவோர் தங்களது வாகனங்கள் அனைத்தும் வேட்புமனு தாக்கல் செய்யும் இடத்தில்  இருந்து 100 மீட்டர் தொலைவில் நிறுத்த வேண்டும். அங்கிருந்து வேட்பாளருடன்  சேர்த்து 5 பேர் மட்டுமே வர அனுமதி அளிக்கப்படுவர். இவ்வாறு தேர்தல் நடத்தை  விதிமுறைகள் உள்ளது.

இதற்காக  வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்களான தஞ்சை கலெக்டர் அலுவலகத்திலும்,  தஞ்சை ஆர்டிஓ அலுவலகத்திலும் எச்சரிக்கை கோடு நேற்று வரையப்பட்டது.  ஏடிஎஸ்பி கோபி, டவுன் டிஎஸ்பி ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் நேற்று  தஞ்சை ஆர்டிஓ அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும்  இடமான ஆர்டிஓ அலுவலகத்தில் இருந்து சர்வேயர் உதவியுடன் 100 மீட்டர் தூரத்தை  அளந்து வெள்ளை நிறத்திலான கோடு போட்ட பின்னர் வேட்புமனு தாக்கல் செய்ய  வருவோர்கள் அறிந்து கொள்ளும் வகையில் 100 மீட்டர் என்று எழுதினர். தஞ்சை  ஆர்டிஓ அலுவலகத்தை சுற்றிலும் 3 பகுதிகளில் இந்த எச்சரிக்கை கோடு  போடப்பட்டது. அதேபோல் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தை சுற்றிலும் இரண்டு  பகுதிகளில் இந்த எச்சரிக்கை கோடு போடப்பட்டது. இவ்வாறு போடப்பட்டுள்ள 100  மீட்டர் எச்சரிக்கை கோட்டை தாண்டி எந்த ஒரு வாகனங்களும், வேட்பாளருடன்  சேர்த்து 5 பேரை தவிர மற்றவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். வேட்புமனு  தாக்கல் செய்யும் இடமான தஞ்சை ஆர்டிஓ அலுவலகம், தஞ்சை கலெக்டர்  அலுவலகத்தில் நுழைவுவாயில் பகுதியில் இரும்பிலான தடுப்பு கட்டைகள் அமைத்து  வேட்புமனு தாக்கல் செய்ய வருவோர் எல்லோரையும் சோதனை செய்த பின்னரே  அனுமதிக்கப்படுவர். இதற்காக நுழைவாயிலில் டோர்பிரேம் மெட்டல் டிடெக்டர்  கருவி பொருத்தப்பட்டுள்ளது.

போலீஸ் நிலையங்களில் அறிவிப்பு பலகை

தஞ்சை நாடாளுமன்றம், சட்டமன்ற  இடைத்தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடக்கிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை  விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தஞ்சையில் பொதுக்கூட்டம்  நடத்துவது, ஆர்ப்பாட்டம் நடத்துவது, பொதுமக்கள் சந்திப்பு இயக்கம்  நடத்துவது உள்ளிட்ட எதை செய்தாலும் உரிய அனுமதி பெற்ற பின்னரே நடத்த  வேண்டும். அவ்வாறு உரிய அனுமதி பெறாமல் நடத்தினால் தேர்தல் நடத்தை விதிமுறை  மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்படும். இதனால் பொதுமக்கள் அனுமதி  பெறுவதற்காக தஞ்சையில் உள்ள போலீஸ் நிலையங்களை நோக்கி வருகின்றனர். ஆனால்  தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்த நாள் முதல் தேர்தல் நடத்தும்  அதிகாரிகளிடமே அனுமதி பெற வேண்டும்.

இதன்படி தஞ்சை சட்டமன்ற தொகுதிக்கு  உட்பட்ட எந்த பகுதியிலும் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், பொதுமக்கள் கூடும்  நிகழ்ச்சி என்று எதை நடத்தினாலும் ஆர்டிஓ அலுவலகம் சென்று எதற்காக  நடத்தப்படுகிறது என்பது குறித்த தகவல்களை தெரிவித்து முறையாக அனுமதி பெற  வேண்டும். இதற்காக தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்தில் அனுமதி பெற வரும்  பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பு பலகையில் தஞ்சை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல், தஞ்சை நாடாளுமன்ற  தேர்தல் தொடர்பாக பொதுக்கூட்டம் மற்றும் ஊர்வலம் நடத்த தஞ்சை ஆர்டிஓ  அலுவலகம் சென்று அனுமதி பெற்று அதன்பின்னர் தஞ்சை தெற்கு போலீஸ் நிலையம் வர  வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிவிப்பு பலகை  வைக்கப்பட்டுள்ளதால் அனுமதி பெற வருவோர்கள் வீண் அலைச்சல் தவிர்க்கப்படுவதுடன் நேரமும் மிச்சப்படுகிறது.

Related Stories: