×

60 ஆண்டு கால கனவு காவிரி, வைகை, குண்டாறு திட்டத்தை நிறைவேற்ற வாக்குறுதி அளிப்பவருக்கே ஆதரவு விவசாயிகள் உறுதி

கந்தர்வகோட்டை, மார்ச்19: தமிழகத்தில் காவிரி, வைகை,குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்திற்கு அமையவுள்ள மத்திய அரசு நிதிஒதுக்குமா என 60 ஆண்டு கால கனவு திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். தங்கள் தேர்தல் வாக்குறுதியில் இத்திட்டத்தை சேர்ப்பவர்களுக்கே தங்களின் வாக்குகள் என விவசாயிகள் உறுதியளித்தனர். காவிரியிலிருந்து மழை காலங்களில் 170 டி.எம்.சி தண்ணீர் கடலில் வீணாக கலந்து வருகிறது. எனவே தான் மழை தண்ணீரை சேமிக்கும் விதமாக காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டம் 1956ல்  ரூ. 189 கோடி செலவில் திட்டம் தீட்டப்பட்டது. ஆனால் நடைமுறைப்படுத்தபடவில்லை. இத்திட்டத்தை செயல்படுத்தினால் சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், கரூர். திருச்சி, தூத்துக்குடி மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் 10.77 லட்சம் ஹெக்டேர் பாசன வசதி பெறும். 2008-09ல் இணைப்பு கால்வாய் திட்டத்திற்கு ரூ.3290 கோடி மதீப்பீடு செய்யப்பட்டு கிட்டதட்ட 118 கிமீ தூரத்திற்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 2014ல் 254கோடி செலவில் மாயனூர் மதகு அணை கட்டப்பட்டு 1.05 டி.எம்.சி தண்ணீர் சேமிக்கப்பட்டு வருகிறது. காவிரி, வைகை, குண்டாறு திட்டத்தை முழுமையாக நிறைவேற்றினால் 7 மாவட்டங்களில் 19 ஆறுகளில் ஆயக்கட்டு பாசன பகுதிகளில் 8 லட்சம் ஏக்கர்கள் நிலம் பாசன வசதி முழுமையாக பெறும்.

 இதுகுறித்து காவிரி, வைகை, குண்டாறு நீர்பாசன விவசாய சங்க மாநிலத் தலைவர் மிசாமாரிமுத்து கூறுகையில் 1952ல் பாராளுமன்றத்தில் முதன்முறையாக முத்துச்சாமி வல்லத்தரசு இத்திட்டத்தை எடுத்து கூறியதன் விளைவு 1956ல் திட்டம் வகுக்கப்பட்டது. அதன்பின்னர்1962ல் உமாநாத் எதிரொலித்தார். அதன்பிறகு கே.ஆர்.சுப்பையா தற்போது என்னுடைய தலைமையில் திட்டத்திற்காக போராடி வருகின்றேன். 60 ஆண்டு கால கனவு திட்டம் இது. இத்திட்டத்தை வலியுறுத்தி 2018ல் 7 நாள் மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தினேன். தற்போது நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் கட்சியினர் இத்திட்டத்தை நிறைவேற்ற தேர்தல் வாக்குறுதி வழங்க வேண்டும். 2009ல் கருணாநிதி ஆட்சி காலத்தில் மாயனூர் மதகு அணை கட்டதொடங்கப்பட்டு அதன்பின்னர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அணை திறக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் அதிமுக ஆட்சியில் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டு தற்போது வரை பின்பற்றவில்லை என்றார். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் பொதுச்செயலாளர் வீரடிப்பட்டி அய்யாத்துரை கூறுகையில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் வாக்குறுதியில் இத்திட்டத்தை நிறைவேற்ற வாக்குறுதி தரும் கட்சியினருக்கு எங்கள் வாக்குகளை அளிப்போம். மேலும் அமையவுள்ள மத்திய அரசு பல ஆண்டுகளாக காத்திருக்கும் விவசாயிகளின்  இத்திட்டத்திற்கு உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags : Vaigai ,
× RELATED கடும் வெயிலால் வைகை அணைக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைவு