×

பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வு இன்று நிறைவு மாணவ, மாணவிகள் உற்சாகம்

பெரம்பலூர், மார்ச் 19: பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வு கடந்த 1ம் தேதி துவங்கி இன்று நிறைவு பெறுகிறது. இதனால் கடைசி தேர்வை எதிர்கொள்ள மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் உள்ளனர். தமிழக  அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு தேர்வுத்துறை இயக்குநகரத்தின் மூலம் பிளஸ்2 மாணவ, மாணவியருக்கான பொதுத்தேர்வு கடந்த 1ம் தேதி துவங்கியது. இந்த தேர்வை 40 அரசு மேல்நிலைப்பள்ளிகள், 4 அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள், 1 ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி, 16 சுயநிதி மற்றும் 16 மெட்ரிக் பள்ளிகள் என 77  மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 4,233 மாணவர்கள், 4,304 மாணவிகள் என மொத்தம்  8,537 பேர் இந்த பொதுத்தேர்வை 32 மையங்களில் எழுதவும், தனித்தேர்வர்கள் 60 பேர் பிரத்தியேகமாக ஒரு தேர்வு மையத்தில் தேர்வெழுதவும் பள்ளி கல்வித்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேர்வு மையங்களை கண்காணிக்க நியமிக்கப்பட்ட 60 பேர் கொண்ட பறக்கும் படையினர் தேர்வு மையங்களில் ஒழுங்கீன செயல்கள் நடக்கிறதா என்று கண்காணித்து சோதனை யிட்டனர். தேர்வு மையங்களில் 33 முதன்மை கண்காணிப்பாளர்கள், 33 துறை அலுவலர்கள், 425 அறை கண்காணிப்பாளர்கள், 5 கூடுதல் துறை அலுவலர்கள் தேர்வு மைய பணிகளை மேற்கொண்டனர்.

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் 77 பள்ளிகளில் பயிலும் 3,536 மாணவர்கள், 4,592 மாணவிகள் என 8,128 மாணவர்கள் தேர்வுகளை எழுது வருகின்றனர். 30 மையங்களில் மாணவர்கள் தேர்வுகளை எழுதுகின்றனர். தேர்வுகளில் மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதை கண்காணிக்க 52 முதன்மை கண்காணிப்பாளர்களும், 9 வழித்தட அலுவலர்களும், 100 பறக்கும் படைகளும், 560 அறை கண்காணிப்பு அலுவலர்களும் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கண் பார்வையற்ற மாணவர்களுக்கு உதவியாளர்கள் நியமிக்கப்பட்டு தேர்வுகள் நடந்து வருகிறது. தேர்வு பணிகள் சார்ந்து தேர்வு நடைபெறும் நாட்களில் தடையில்லா மின்சாரம் வழங்கவும், மாணவர்கள் குறித்த நேரத்தில் தேர்வு மையத்துக்கு தேர்வெழுத ஏதுவாக செல்ல போதிய பேருந்து வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் தேர்வுகள் அமைதியாக நடைபெற ஒவ்வொரு தேர்வு மையத்துக்கும் ஒரு ஆயுதம் தாங்கிய காவலர் உட்பட போதிய காவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வு இன்று நிறைவு பெறுகிறது. இதனால் பிளஸ்2 மாணவ, மாணவிகள் உற்சாகத்தில் உள்ளனர்.

Tags : examination ,Perambalur ,Ariyalur district ,
× RELATED “அரியலூர் மாவட்டத்தில் சுற்றிய...