×

இலவச வீட்டுமனை வழங்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக வயலப்பாடியில் கருப்புக்கொடி தோரணம் பேனரும் வைத்துள்ளதால் பரபரப்பு: தாசில்தார் பேச்சுவார்த்தையும் தோல்வி

பெரம்பலூர், மார்ச் 19: கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து வயலப்பாடி கிராமத்தில் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்து பேனர் வைத்ததுடன் கருப்புக்கொடியை பொதுமக்கள் கட்டி வைத்துள்ளனர். பொதுமக்களிடம் தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தியும் பயனில்லை. பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா வேப்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்டது வயலப்பாடி கிராமம். இவ்வூர் ஆதிதிராவிடர் காலனி பகுதி பஸ் நிறுத்தத்தில் பொதுமக்கள் சார்பில் அப்பகுதியை சேர்ந்த பெரியசாமி மகன் தமிழ்ச்செல்வன் என்பவரால் தேர்தலை புறக்கணிப்பதாக பேனர் வைக்கப்பட்டுள்ளது. அந்த பேனரில் தெரிவித்திருப்பதாவது: எங்கள் கிராமத்தில் இடநெருக்கடி காரணமாக 1985ம் ஆண்டு அன்றைய தமிழக அரசிடம் மனு கொடுத்திருந்தோம். அதன் பலனாக தமிழக அரசு ஆதிதிராவிடர்- பழங்குடியினர் நலத்துறை மூலம் நிலம் கையகப்படுத்தும் பிரிவு 7-1894ன்படி 6.40 ஏக்கர் நிலத்ைத கையகப்படுத்தி இலவச வீட்டுமனை பட்டா வழங்க அரசிதழில் அரசாணை வெளியிடப்பட்டது. நிலத்துக்கு சொந்தமானவர்கள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் 2007ம் ஆண்டு மார்ச் 25, 2007 ஜூலை 19, 2013 மார்ச் 28ம் தேதி ஆகிய தேதிகளில் நிலம் ஆதிதிராவிட மக்களுக்கு வழங்குமாறு தீர்ப்பளித்தும் மாவட்ட நிர்வாகம் இன்று வரை நடைமுறைப்படுத்தவில்லை.
அரசாணை வெளியிட்ட அரசை அவமதித்து ஆதிகுடிகளுக்கு அநீதி இழைக்கும் போக்ைக கைவிடும் வரை எங்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் தொடரும். இந்த தேர்தல் புறக்கணிப்பு போராட்டம், இந்த பாராளுமன்ற தேர்தலோடு நின்று விடுவதில்லை.

33 ஆண்டுகால பிரச்னைக்கு தீர்வு எட்டும் வரை இனி வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தல் வரை தொடரும். இனி எவருக்கும் எங்களது வாக்குகள் இல்லை. இப்படிக்கு ஊர் பொதுமக்கள், வயலப்பாடி என அந்த பேனரில் அச்சிடப்பட்டிருந்தது. மேலும் பேனருக்கு மேலே கருப்புக்கொடிகள் தோரணம்போல் கட்டி தொங்க விடப்பட்டிருந்தது. சத்தமின்றி நடந்து வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் திடீரென அதிரடியாக தேர்தல் புறக்கணிப்பு என கருப்பு கொடியோடு வயலப்பாடி கிராமத்து பஸ் நிறுத்தத்தில் பேனர் வைத்துள்ள தகவல் அக்கம்பக்கத்து கிராமங்கள் முதல தாலுகா அலுவலகம் வரை எதிரொலித்தது.  இதைதொடர்ந்து நேற்று மதியம் குன்னம் தாசில்தார் செல்வராஜ், வயலப்பாடிக்கு சென்று தமிழ்ச்செல்வன் தரப்பினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது பேனர் வைத்து தேர்தலை புறக்கணிப்பதே வருவாய்த்துறையை கண்டித்து தான், இதற்கு உங்கள் துறை தீர்வு காணும் வரை எங்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் அறவழியில் தொடரும் என்று கூறியதால் குன்னம் தாசில்தார் செல்வராஜ் ஏமாற்றத்துடன் சென்றார். இந்த பகுதியில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் அடங்கியுள்ளது.

Tags : election ,district administration ,
× RELATED நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் தபால் வாக்கு செலுத்தினர்