×

எம்பி தத்தெடுத்தும் தவக்கும் கிராமம் ஆவியூரில் அடிப்படை வசதி ‘அவுட்’

காரியாபட்டி, மார்ச் 19: காரியாபட்டி அருகே, ஆவியூர் கிராமத்தை எம்பி தத்தெடுத்தும் போதிய அடிப்படை வசதியில்லாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். சாலை, வாறுகால், குடிநீர் என பிரச்னைகளுக்கு குறைவில்லை.
காரியாபட்டி அருகே, ஆவியூர் கிராமத்தில் சுமார் 10 ஆயிரம் பொதுமக்கள் வசிக்கின்றனர். இந்த ஊரைச் சுற்றி அரசகுளம், மாங்குளம், குரண்டி ஆகிய கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இந்நிலையில், ஆவியூர் கிராம மக்கள் போதிய அடிப்படை வசதியின்றி அவதிப்படுகின்றனர். இந்த பகுதி கிராம மக்கள் மருத்துவமனைக்காக பல கி.மீ தூரம் செல்கின்றனர். கர்ப்பிணி பெண்கள் மாதாந்திர பரிசோதனைக்கு 15 கி.மீ தூரம் உள்ள முஸ்டக்குறிச்சிக்கு செல்கின்றனர். கிராமத்தில் வாறுகால், சாலை வசதியில்லை. கர்ப்பிணிகள் அவசர காலங்களில் அருகில் உள்ள காரியாபட்டி அரசு மருத்துவமனைக்கு சென்றால், அங்கிருப்பவர்கள் முஸ்டக்குறிச்சிக்கு செல்ல அறிவுறுத்துகின்றனர். இதனால், கர்ப்பிணிகள் அவதிப்படுகின்றனர். ராமநாதபுரம் எம்பி அன்வர் ராஜா கிராமத்தை தத்தெடுத்தும் போதிய அடிப்படை வசதியில்லை. ஆவியூரில் கால்வாய், நிழற்குடை மட்டுமே கட்டப்பட்டுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்த அரசு நடவடிக்கை இல்லை. ரூ.பல லட்சத்தில் கட்டப்பட்ட வாறுகால், தரமாக கட்டப்படாததால் கழிவுநீர் தேங்குகிறது. இதில் பிளாஸ்டிக், குப்பை தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் உருவாகி சுகாதாரக்கேட்டை உருவாக்குகிறது. கிராமத்தில் குடிநீர் பிரச்னையும் உள்ளது.

மேலும், கிராமத்தில் உள்ள மகளிர் சுகாதார வளாகம், ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றை பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, ஆவியூர் கிராமத்துக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து திமுக இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் சிதம்பரபாரதி கூறுகையில், ‘ஆவியூரில் பெருமாள் கோயில் ஓடை வாறுகால் ரூ.15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது. இதில் குப்பைகள் தேங்கி கொசுக்கள் உருவாகின்றன. டெங்கு காய்ச்சலால் பெண் ஒருவர் இறந்தவுடன், கிராமத்தில் தூய்மை நடவடிக்கை எடுப்பதாக பாசாங்கு செய்தனர். குடிநீர், சாலை வசதியில்லை. மருத்துவமனை மேம்படுத்தப்படவில்லை. அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இருந்தும் மருத்துவர், செவிலியர் வருவதில்லை. மருத்துவமனைக்கு செல்ல காரியாபட்டிக்கோ, மதுரை மாவட்டம் எலியார்பத்தி கிராமத்திற்கோ அலைய வேண்டியுள்ளது. எம்பி தத்தெடுத்தும் அடிப்படை வசதியில்லை. ஆவியூர் அம்மா பேரவை ஒன்றிய அமைப்பாளர் குண்டுகுமார் கூறுகையில், ‘ஆவியூரை எம்பி தத்தெடுத்ததால் நிழற்குடையும், குடிநீர் தொட்டியும் தான் கிடைத்துள்ளது. மக்களுக்கு தேவையான அடிப்படை வசதியில்லை’ என்றார்.

Tags : village ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிராமம்...