×

சிவகங்கை மாவட்டத்தில் பெண் வாக்காளர்கள் 4 மடங்கு அதிகரிப்பு ஆண்கள் வேலைதேடி புலம்பெயர்ந்ததால் சரிவு

சிவகங்கை, மார்ச் 19:  சிவகங்கை மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் ஆண் வாக்காளரைவிட பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 2015ம் ஆண்டு ஜனவரியில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல்படி ஆண்களை விட 2 ஆயிரத்து 913 பெண் வாக்காளர்கள் கூடுதலாக இருந்தனர். 2016 செப்டம்பரில் வெளியிடப்பட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல்படி ஆண்களை விட 9 ஆயிரத்து 399 பெண் வாக்காளர்கள் கூடுதலாக இருந்தனர். 2017 அக்டோபரில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் படி ஆண்களை விட 12 ஆயிரத்து 71 பெண் வாக்காளர்கள் கூடுதலாக இருந்தனர். 2018 செப்டம்பரில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் ஆண்களை விட 11 ஆயிரத்து 751 பெண் வாக்காளர்கள் கூடுதலாக இருந்தனர்.

கடந்த ஜனவரி 31ல் சிவகங்கை மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 11 லட்சத்து 17 ஆயிரத்து 666 வாக்காளர்கள் உள்ளனர். இதில் பெண்கள் 5 லட்சத்து 65 ஆயிரத்து 260, ஆண்கள் 5 லட்சத்து 52 ஆயிரத்து 350, பிற பாலினத்தவர் 56 நபர்கள் ஆவர். ஆண்களை விட 12 ஆயிரத்து 910 பெண் வாக்காளர்கள் கூடுதலாக உள்ளனர். நான்கு ஆண்டுகளில் பெண் வாக்காளர் எண்ணிக்கை சுமார் 4 மடங்கு அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டுகளில் திருப்பத்தூர் மற்றும் சிவகங்கை தொகுதிகளில் பெண் வாக்காளர் எண்ணிக்கை கூடுதலாக இருக்கும்.

இந்நிலையில் தற்போது காரைக்குடி, மானாமதுரை உள்ளிட்ட நான்கு சட்டமன்ற தொகுதிகளிலுமே பெண் வாக்காளர்கள் தான் கூடுதலாக உள்ளனர். அதிகபட்சமாக திருப்பத்தூரில் 3 ஆயிரத்து 742, சிவகங்கையில் 3 ஆயிரத்து 673, காரைக்குடியில் 3 ஆயிரத்து 370, மானாமதுரையில் 2 ஆயிரத்து 125 பெண் வாக்காளர்கள் என மாவட்டம் முழுவதும் ஆண்களை விட பெண் வாக்காளர்களே கூடுதலாக உள்ளனர். அரசியல்கட்சி பிரமுகர் ஒருவர் கூறுகையில், இந்த மாவட்டத்தை பொறுத்தவரை வேலைவாய்ப்புகள் மிகவும் குறைவு. அதனால் ஆண்கள் வெளி மாவட்டங்கள், வெளி நாடுகள் சென்று வேலைபார்க்க வேண்டிய நிலை உள்ளது. விவசாய வேலை வாய்ப்பும் குறைந்து வருகிறது. இதனால் விவசாய கூலி வேலை செய்தவர்களும் மாவட்டத்தைவிட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆண்களைவிட பெண் வாக்காளர் எண்ணிக்கை அதிகமாவதற்கு இதுவே பிரதான காரணமாக இருக்கலாம்’’ என்றார்.

Tags : voters ,district ,Sivagangai ,migrant workers ,
× RELATED சட்டமன்ற உறுப்பினர்கள்...