×

காலை 11 மணிமுதல் மாலை 6 மணி வரை முதியவர்கள் வெயிலில் செல்ல வேண்டாம் கொளுத்தி எடுக்கிறது வெயில் * டாக்டர்கள் அட்வைஸ்

காரைக்குடி, மார்ச் 19:  தமிழகம் முழுவதும் பகல் நேரங்களில் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் பல்வேறு திடீர் நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இதிலிருந்து தப்பிப்பதற்கான வழிமுறைகள் குறித்து அரசு ஆரம்ப சுகாதார நிலைய  டாக்டர் சீனிவாசன் கூறுகையில், ‘‘வெயில்காலத்தில் உடலில் நீர் சத்து  குறைவாக இருக்கும். சர்க்கரை, நீர் கரைசலை அதிகமாக குடிக்க வேண்டும்.  வெயிலை தாங்க கூடிய கதராடைகளை அணிய வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு முறை  குளிக்க வேண்டும். பழங்களை உண்ண வேண்டும். வயிற்று போக்கு ஏற்படாமல்  இருக்கக தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும். முதியவர்கள் காலை 11 மணி முதல்  மாலை 6 மணிவரை வெயிலில் செல்லக்கூடாது. ரத்தம் அழுத்தம், சர்க்கரை  நோயாளிகள் உடலில் கவனம் செலுத்த வேண்டும்’’ என்றார்.

அரசு மருத்துவமனையின் சித்த மருத்துவர் டாக்டர் மகேந்திரன் கூறியதாவது:கடும் வெயிலின் காரணமாக உடலில் கொப்பளம், அம்மை நோய், நீர்கடுப்பு, தலைவலி, பெண்களுக்கு வெள்ளைபடுதல் போன்ற உபாதைகள் ஏற்படுகின்றன. இதிலிருந்து காத்துக்கொள்ள இக்காலங்களில் டெரிகாட்டன், பாலிஸ்டர் ஆடைகள் உடுத்துவதை தவிர்க்க வேண்டும். உணவு பொருட்களில் உப்பு, புளி, காரம் போன்றவற்றை குறைத்துக் கொண்டு, கசப்பு, துவர்ப்பு போன்றவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும், நுங்கு, ஜூஸ் வகைகள், நீர்ச்சத்து உள்ள காய்கறிகளான சுரைக்காய், முள்ளங்கி, வாழைத்தண்டு, கேரட், பீட்ரூட் போன்றவற்றை உண்ண வேண்டும்.வெயிலில் சுற்றி விட்டு வந்தவுடன் உடனடியாக ஐஸ்வாட்டர், குளிர்பானம் போன்றவற்றை அருந்தக் கூடாது. அதுபோல் மழையில் நனைந்து வந்தவுடன் டீ, காபி போன்ற சூடானவற்றை அருந்தக் கூடாது. இதனால் வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் ஏற்படும். மேலும், தும்மல், சளி போன்றவை ஏற்படாமல் இருக்க வீட்டை குப்பைகள் மற்றும் தூசு இன்றி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், வெளியில் செல்லும்போது குடையை எடுத்துச் செல்ல பழகிக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Weil ,
× RELATED சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு:...