×

இடைத்தேர்தல் நடக்கும் ஆண்டிபட்டி, பெரியகுளம் தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமனம்

தேனி, மார்ச் 19: தேனி மாவட்டத்தில் இடைத்தேர்தல் நடக்கும் ஆண்டிபட்டி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தேர்தல் அறிவித்து 8 நாட்களுக்கு பிறகு நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேனி பாராளுமன்ற தொகுதிக்கான பொதுத்தேர்தல் மற்றும் ஆண்டிபட்டி, பெரியகுளம்(தனி) சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற ஏப்ரல் 18ம் தேதி நடக்க உள்ளது. தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, பெரியகுளம்(தனி), போடி, கம்பம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. தேனி பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக தேனி மாவட்ட கலெக்டர் பல்லவிபல்தேவ் தேர்தல் அறிவித்த நாள்முதல் நியமிக்கப்பட்டுள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தனித்தனியாக பாராளுமன்ற தேர்தல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேசமயம், தேனி மாவட்டத்தில் காலியாக உள்ள ஆண்டிபட்டி, பெரியகுளம்(தனி) சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ள நிலையில், தேர்தல் நடத்தும் அலுவலர் நியமிக்கப்படாமல் இருந்தனர். இதுகுறித்து தினகரனில் கடந்த 4 நாட்களுக்கு முன்பாகவே விரிவான செய்தி வெளியானபோதும், நேற்றுதான் இவ்விரு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்னர். இதன்படி, ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக சமூக பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியர் கண்ணகியும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக ஆண்டிபட்டி தாசில்தார் பாலசண்முகமும் நியமிக்கப்பட்டுள்ளனர். பெரியகுளம்(தனி) சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக பெரியகுளம் கோட்டாட்சியர் ஜெயப்ரீத்தாவும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக பெரியகுளம் தாசில்தார் சுந்தர்லாலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Elections ,Election Commission ,constituencies ,Periyakulam ,Andipatti ,
× RELATED தேர்தல் பிரசாரங்களில் விமானம்,...