×

வாக்குச்சாவடி மையம் அருகே எல்லைக்கோடு வரையும் பணி தீவிரம்

தேனி, மார்ச் 19: தேனி மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையம் அருகே 100 மீட்டர் எல்லையைக் குறிக்கும் வகையில் 100 மீட்டர் எல்லைக்கோடு வரையும் பணி துரிதமாக நடந்து வருகிறது. இந்திய பாராளுமன்ற 17வது பொதுத்தேர்தல் பல கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் ஒரு சட்டமன்ற தொகுதி மற்றும் தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகள் என மொத்தம் 19 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வருகிற ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் கடந்த 10ம் தேதி மாலை முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனையடுத்து, அரசியல் கட்சியினர் பிளக்ஸ் பேனர்கள் பொது இடங்களில் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு பொதுச்சுவர்கள், கட்டிடங்களில் விளம்பரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடியை ஒட்டிய 100 மீட்டர் எல்லைக்குள் பிரச்சாரம் செய்யவோ, சுவரொட்டி ஒட்டவோ, சுவர் விளம்பரம் செய்யவோ கூடாது என தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, பெரியகுளம்(தனி), போடி, கம்பம் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்த நான்கு சட்டமன்றத் தொகுதிகளிலுமாக மொத்தம் 861 இடங்களில் 1783 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தகைய வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ள இடங்களில் இருந்து 100 மீட்டர் எல்லையைக் குறிக்கும் வகையில் எல்லைக்கோடு வரையும் பணியில் தேர்தல் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து, அனைத்து வாக்குச்சாவடி மையங்கள் அருகே 100 மீ எல்லைக்கோடு வரையும் பணி துரிதமாக நடந்து வருகிறது.

Tags : intersection ,polling center ,
× RELATED சென்னையில் தபால் வாக்குப்பதிவு...