×

இரவில் குடிமகன்களின் தொல்லையால் திறந்தவெளி பாராகும் வாரச்சந்தை


ராமநாதபுரம், மார்ச் 19: சத்திரக்குடியில் வாரச்சந்தை கடைகள் இரவு நேரங்களில் குடிமகன்களின் பாராகி வருவதால், அப்பகுதியில் நடமாட முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ராமநாதபுரம் அருகே சத்திரக்குடி கிராமத்தில் திங்கட்கிழமை தோறும் வாரச்சந்தை நடக்கிறது. போகலூர், கவிதைகுடி, தீயனூர் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட சுற்றுப்புற கிராமங்களிலிருந்து ஏராளமான கிராம மக்கள் வாரச்சந்தைக்கு வருகின்றனர். சந்தையில் மொத்தம் 9 கடைகள் உள்ளன. சந்தைக்கு என ஓதுக்கப்பட்ட இடத்தில் அடிப்படை வசதிகள் இல்லை. சந்தையின் நுழைவு பகுதியில் கேட் இல்லாததால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் வாரச்சந்தை கடைகளை இரவு நேரங்களில் மது அருந்தும் பாராக பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

ராமநாதபுரம், பரமக்குடி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் வாரச்சந்தை கடைகள் அமைந்துள்ளதால், மதுவை அருந்தி விட்டு தினந்தோறும் பலர் செய்யும் பிரச்னைக்கு பயந்து பொதுமக்கள் அப்பகுதியில் நடமாட தயக்கம் காட்டுகின்றனர். இப்பிரச்னையை தவிர்க்க விரைவில் சந்தைக்கு நுழைவுகேட் அமைக்கவும், குடிமகன்களை இரவு நேரங்களில் உள்ளே செல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்கவும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து வியாபாரி சந்திரன் கூறுகையில், வாரச்சந்தையில் நிரந்தர கடைகள் தவிர தற்காலிகமாக சுமார் 50க்கும் மேற்பட்ட திறந்தவெளி கடைகள் அமைக்கப்படுகின்றன. கடை ஒன்றுக்கு ரூ.50 முதல் 75 வரை வாடகை வசூல் செய்கின்றனர். இருப்பினும் அடிப்படை வசதிகள் கிடையாது. ஊராட்சி நிர்வாகத்தினர் சந்தை பகுதியை சுத்தம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நுழைவுகேட் இல்லாததால் இரவுநேரங்களில் பலர் சந்தைகடைகளை பாராக மாற்றி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் அப்பகுதியில் நடமாட முடியவில்லை என்று கூறினார்.


Tags : war ,citizens ,
× RELATED ராகுல் தொகுதியில் புகுந்த...