×

திருவாரூர் இடைத்தேர்தல் இன்று வேட்புமனு தாக்கல் துவக்கம் அனைத்து முன்னேற்பாடுகள் தயார்

திருவாரூர், மார்ச் 19: திருவாரூர் இடைதேர்தலையொட்டி இன்று முதல் துவங்கவுள்ள வேட்பு மனு தாக்கலுக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தொகுதியின்  தேர்தல் அலுவலர் முருகதாஸ் தெரிவித்துள்ளார். திருவாரூர் தொகுதியின் இடைத்தேர்தலானது நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து அடுத்த மாதம்  18ந் தேதி நடைபெறுவதையொட்டி இன்று முதல் வேட்பு மனு தாக்கலானது துவங்குகிறது. இதனையொட்டி தொகுதியின் தேர்தல் அலுவலகமான தெற்கு வீதியில் இயங்கி வரும் ஆர்.டிஓ அலுவலகத்தில் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த ஜனவரி 28ம் தேதி தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அப்போது அந்த மாதம் 3ம் தேதி வேட்பு மனு தாக்கல் துவங்கிய நிலையில் இந்த அலுவலகத்தில் எவ்வித  முன்னேற்பாடு பணிகளும் செய்யப்படாமல் இருந்தது தொடர்பாக பத்திரிக்கை மற்றும் தொலைகாட்சிகளில் செய்தி வெளியிடப்பட்டது. மேலும் வேட்பு மனு தாக்கலுக்கான விண்ணப்பபடிவம் கூட கிடைக்காமல் வேட்பாளர்கள் அவதிப்பட்டனர்.

இந்நிலையில் தற்போது இன்று முதல் வேட்பு மனு தாக்கல் துவங்கவுள்ள நிலையில் வேட்பு மனுவிற்கு தேவையான படிவம் 2பி தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் அறிவிப்பு படிவமும் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் தொகுதியின் தேர்தல் அலுவலரான  ஆர்டிஓ முருகதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் அவர்  கூறுகையில்,  படிவம் 2பி என்பது காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரையில் அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம். அறிவிப்பு படிவம் என்பது வேட்பு மனு துவங்கும் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரையில் மட்டுமே வழங்கப்படும். மேலும் மனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள் தங்களது வாகனங்களை 100 மீட்டருக்கு அப்பால் நிறுத்த வேண்டும் . வேட்பாளர் சேர்த்து மொத்தம் 5 பேர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவர். மேலும் இந்த மனு தாக்கலையொட்டி 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மேலும்   இடைத்தேர்தல் தொடர்பான பொது நடத்தை விதிகள் கடந்த 10ம் தேதி மாலை முதல் அமலுக்கு வரப்பெற்றுள்ளது. இதனையடுத்து  எந்த ஒரு அரசியல் கட்சியும் அல்லது வேட்பாளரும் வெவ்வேறு சாதி, இனம், மதம், மொழி குறித்து விமர்சனம் செய்யக் கூடாது. மேலும் தனிப்பட்ட நபர்கள் குறித்தும் விமர்சனம் செய்யக்கூடாது.

வாக்காளர்களுக்கு கையூட்டு கொடுக்க கூடாது என்பதுடன் வாக்குச் சாவடியிலிருந்து 200 மீட்டருக்குள் பிரசாரமும் செய்ய கூடாது. வாக்குப்பதிவு முடிவடைய நிர்ணயம் செய்யப்பட்ட 48 மணி நேரத்திற்குள் பொதுக்கூட்டங்கள் நடத்த கூடாது. மேலும் வாக்கு பதிவு நாளில் வாக்காளர்களை வாகனங்களில் வாக்கு சாவடிக்கு அழைத்து வர கூடாது. ஒரு தனிப்பட்ட நபருக்கு சொந்தமான இடம்,கட்டிடம் சுற்றுச்சுவர் ஆகியவற்றில் அவரது அனுமதியில்லாமல் விளம்பரம் செய்ய கூடாது. அரசியல் கட்சினர் மற்றும் வேட்பாளர்கள் தாங்கள் நடத்த உத்தேசித்துள்ள கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் குறித்தும், ஒலி பெருக்கிகள் குறித்தும் போலீசாரிடம் ஒற்றை சாரளம் முறையில் ஆன்லைனில் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். போக்குவரத்து விதிகள், கட்டுப்பாடுகள் ஆகியவற்றை மதித்து நடப்பதோடு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படா வண்ணமும் ஊர்வலங்களை நடத்த வேண்டும்.  
மேலும் ஊர்வலத்தின் போது   கட்சியினர் தேவையில்லாத பொருட்களையோ அல்லது தலைவர்களின் உருவ பொம்மைகளையோ எடுத்து செல்வதையோ அல்லது அதை எரிப்பதையோ தவிர்க்க வேண்டும். காலை 6 மணிக்கு முன்பும் இரவு 10 மணிக்கு பிறகும் கூட்டங்கள் , ஊர்வலங்கள் நடத்தக் கூடாது.  மேலும் அரசியல் கட்சிகள் தங்களின் அதிகாரப்பூர்வ பணியாளர்களுக்கு அடையாள அட்டைகளையும், பேட்ஜ்
களையும் அளிக்க வேண்டும்.

வாக்குப்பதிவிற்கு 24 மணி நேரத்திற்கு முன்பிருந்து மதுபானங்கள் எதையும் வழங்கக் கூடாது. தேர்தல் நாளன்று வேட்பாளர்களின் முகாம்கள், 200 மீட்டருக்குள் அப்பால் அமைக்கப்பட வேண்டும் தேர்தல் நாளன்று வேட்பாளர்களின் முகாம்களில் போஸ்டர்கள், கொடிகள், சின்னங்கள் அல்லது இதர பிரச்சார சாதனங்கள் பயன்படுத்தக் கூடாது. முகாமில் கூடும் கூட்டத்தினருக்கு தின்பண்டங்கள் எதையும் வழங்கக் கூடாது. வாக்காளர்களுக்கு வழங்கும் வாக்காளர் சீட்டுகள் வெள்ளைக் நிறத்தில் சின்னம் மற்றும் அரசியல் வாசகங்கள் இல்லாமல் இருக்க வேண்டும். தேர்தல் நடைமுறைகளில் ஏதாவது குறைபாடுகள் இருந்தால் வேட்பாளர்கள் அல்லது அவர்களது முகவர்கள் தேர்தல் பார்வையாளாரிடம் புகார் செய்யலாம். மேலும் அதிகாரத்தில் உள்ள கட்சி எந்த சூழ்நிலையிலும் தேர்தல் நடைமுறைகளில் தனது அலுவலக அதிகாரத்தை தேர்தல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தக் கூடாது. வேட்பு மனு தாக்கலின்போது தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தின் 100 மீட்டர் தூரத்திற்குள் 3 வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும்.  

தேர்தல் பணிக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் மூலம் அதற்குரிய அனுமதியை பெற்று, அந்த அசல் அனுமதி ஆணையை வாகனத்தின் முன் பக்க கண்ணாடியில் ஒட்டி இருக்க வேண்டும். தேர்தல் சமயத்தில் சலுகைகள், பணம் மற்றும் வேறுமுறையில் வாக்காளர்களை தூண்டுதல் கூடாது என்பதுடன் நகராட்சி பகுதிகளில் எந்த வகையான சுவர் விளம்பரமோ, பேனர் விளம்பரமோ  செய்யக் கூடாது. மேலும் ஊராட்சி பகுதிகளில் இடத்தின் உரிமையாளரிடம் சம்மத கடிதம் பெற்று உரிய அலுவலர்களின் அனுமதி பெற்று விளம்பரம் செய்யலாம். எனவே அனைத்து அரசியல் கட்சியினரும், வேட்பாளர்களும் தேர்தல் அலுவலர்களுக்கு முழு ஒத்துழைப்பு  அளித்து  அமைதியான முறையில் தேர்தல் நடைபெற ஒத்துழைக்குமாறு  கேடடுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு தொகுதியின் தேர்தல் அலுவலர் முருகதாஸ் தெரிவித்துள்ளார். கலெக்டர் அலுவலகம்: இதேபோன்று நாகை எம்.பி தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலகமாக திருவாரூர் கலெக்டர் அலுவலகம் இருந்து வரும் நிலையில் இன்று முதல் இங்கு நடைபெறும் வேட்பு மனு தாக்கலுக்காக அனைத்து முன்னேற்பாடு பணிகளும் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ஆனந்த் தெரிவித்துள்ளார்.   

Tags : Thiruvarur ,
× RELATED வாக்கு சாவடிகளுக்கு அனுப்புவதற்காக...