×

மதுரை மக்களவை தேர்தல் வேட்புமனுத்தாக்கல் இன்று துவக்கம்

மதுரை, மார்ச் 19: மக்களவை தேர்தல் தமிழகத்தில் ஏப்.18ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுதாக்கல் இன்று (மார்ச் 19) துவங்குகிறது. 26ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். 27ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. 28 மற்றும் 29ம் தேதிகளில் வேட்பு மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாளாகும்.மதுரை மக்களவைத் தொகுதியில் மேலூர், மதுரை கிழக்கு, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மத்தி, மதுரை மேற்கு ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கும். இத்தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அலுவலராக மதுரை கலெக்டர் நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இத்தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கலெக்டரிடமும், இவருக்கு உதவியாக கூடுதல் தேர்தல் நடத்தும் அலுவலராக மதுரை ஆர்டிஓ முருகானந்தம் நியமிக்கப்பட்டுள்ளார். இவரிடமும் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

மதுரைத் தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சு.வெங்கடேசனும், அதிமுக சார்பில் ராஜ்சத்யன், அமமுக சார்பில் டேவிட் அண்ணாத்துரை ஆகியோர் அதிகார பூர்வ கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். இத்தொகுதியில் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இத்தொகுதியில் போட்டியிட விரும்பும் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் வேட்புமனுக்களுக்கான படிவத்தை வாங்கி சென்றுள்ளனர். மதுரை தொகுதியில் போட்டியிடும் முக்கியமான இந்த 3 வேட்பாளர்களும் வேறு (விருதுநகர் மக்களவைத் தொகுதி) தொகுதியை சேர்ந்தவர்கள். வரும் 20 மற்றும் 22ம் தேதி முகூர்த்த நாள் என்பதால், இந்த தேதிகளில் முக்கிய அரசியல் கட்சியினர் வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சுயேட்சையாக போட்டியிடுவோர் இன்று முதல் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Madurai ,Lok Sabha ,
× RELATED மக்களவைத் தேர்தல் பிரசாரத்திற்காக...