×

ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் அரசு மணல் குவாரி மூடல்

ஊத்துக்கோட்டை, மார்ச் 19: ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் நடந்த அரசு மணல் குவாரி மூடப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் உள்ள ஆரணி ஆற்றில் மணல் குவாரி தொடங்கப்போவதாக கடந்த ஆண்டு அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியானதும் அனந்தேரி  கிராமத்தில் நடந்த கிராம சபையில் முதன் முதலாக குவாரியை ரத்து செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து குவாரியை ரத்து செய்ய வலியுறுத்தி சுற்றுப்புற கிராம  விவசாயிகள், ஊத்துக்கோட்டையை சேர்ந்த  வியாபாரிகள், திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கடையடைப்பு, சாலை மறியல், மனித சங்கிலி மற்றும் மகளிர் குழு பெண்கள் சாலை மறியல் என பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

ஆனாலும், பொதுமக்களின்  போராட்டங்களை மீறி கடந்த வருடம்  ஜூன்  1ம் தேதி முதல் ஊத்துக்கோட்டை ஆரணியாற்றில் அரசு மணல் குவாரி இயங்க தொடங்கியது.    மணல் குவாரி தொடங்கி ஒரு மாதத்திலேயே  ஊத்துக்கோட்டை,  அனந்தேரி, சிட்ரபாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள  விவசாய நிலங்களில்  நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது. பம்ப் செட்டுகளில் தண்ணீரின் அளவு பைப்பின் அளவில் பாதியாகத்தான் வருகிறது. மேலும் குடிநீர் பிரச்னையும் ஏற்பட்டது. இதனால்  விவசாயிகள், பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், மணல் குவாரியில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்தது. அதன் பேரில்  திட்ட இயக்குனர் அருண் தம்புராஜ் தலைமையில் உயர்நீதிமன்ற குழு  அமைக்கப்பட்டு  அந்த குழுவினர்  கடந்த செப்டம்பர் மாதம் 10ம் தேதி  ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் மணல் குவாரி நடந்த இடத்தை ஆய்வு செய்தனர்.பின்னர் விவசாய கிணற்று பகுதிகளுக்குச் சென்று தண்ணீரின் வேக அளவை கணக்கீடு செய்தனர். அதன் பின்னர் அந்த அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

அதில், குவாரியில் முறைகேடு நடந்தது தெரிய வந்தது.  பிறகு மணல் குவாரி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் 4 மாதங்களுக்கு பிறகு கடந்த பிப்ரவரி மாதம்  ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் மீண்டும் அரசு மணல் குவாரி தொடங்கப்பட்டது. இது   ஊத்துக்கோட்டை மற்றும் சுற்றுப்புற கிராம விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு  அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் ஒரு வழியாக டெண்டர் முடிந்து மணல் குவாரி நேற்று முன்தினம்  மூடப்பட்டது. இதனால் ஊத்துக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள்மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கிடங்கில் இருந்து விற்க ஏற்பாடு
பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:  ஊத்துக்கோட்டை  ஆரணியாற்றில் மொத்தம் 34 ஆயிரத்து 148 யூனிட் மணல் எடுக்க அரசு  உத்தரவிட்டது.   செப்டம்பர்  மாதம் வரை 28 ஆயிரத்து 160 யூனிட் வரை மணல்  எடுக்கப்பட்டது.  பின்னர் மீதமுள்ள 7988 யூனிட் மணல் கடந்த பிப்ரவரி முதல்  தொடங்கி  எடுக்கப்பட்டு தற்போது  நிறைவு பெற்றுள்ளது. தற்போது ஊத்துக்கோட்டை  ஆரணி ஆற்றில் இருந்து எடுக்கப்பட்ட மணல் குருபுரம் பகுதி கிடங்கில்  மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த  மணல் அரசு அனுமதியுடன் விற்கப்படும் என்றனர்.

Tags : River Aurikkodu ,
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...