×

பங்குச்சந்தையில் லாபம் ஈட்டி தருவதாக 60 பேரிடம் ₹3.17 கோடி மோசடி

திருவள்ளூர், மார்ச் 19: பங்குச்சந்தையில் லாபம் ஈட்டித் தருவதாக கூறி, திருவள்ளூரில் 60 பேரிடம் ரூ.3.17 கோடி பணம் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க  வலியுறுத்தி திருவள்ளூர் எஸ்.பி., அலுவலகத்தை பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகையிட்டனர். திருவள்ளூர் நகராட்சி புங்கத்தூர் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது உறவினரான அர்ஜுன் (எ) கந்தவேல் பட்டாபிராமில் வசித்துவந்தார். இவர் சென்னை  அரும்பாக்கத்தில் பங்கு சந்தை ஷேர்களை வாங்கி விற்கும் புரோக்கராக வேலை செய்து வந்தார். ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்தால், பல மடங்கு லாபம் கிடைக்கும் என அர்ஜுன் கூறியதால், கடந்த 2015ம் ஆண்டு முதல் பல தவணைகளாக ரூ.20 லட்சம் பணத்தை இளங்கோவன் செலுத்தியுள்ளார். இதேபோல், மயிலாப்பூரில் உள்ள வி.எம்.பைனான்ஸ் மூலம் பங்குச்சந்தையில் பணம் செலுத்தினால், 3 மாதத்துக்கு ஒருமுறை லாபம் ஈட்டித்த தருவதாக கூறி, திருவள்ளூர் புங்கத்தூர் பகுதியில் உள்ள இளங்கோவன் பெயரை பயன்படுத்தி, 60 பேரிடம் ரூ.3.17 கோடி வசூலித்து உள்ளார்.

ஆனால், யாருடைய கணக்கிலும் லாப தொகை வரவில்லை. இதனால் கொடுத்த பணத்தை திருப்பி தரும்படி கேட்க செல்போன் மூலம் அர்ஜுனை தொடர்பு கொண்டனர்.  ஆனால், செல்போன் ‘‘ஸ்விட்ச் ஆப்’’ செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து பணம் கொடுத்தவர்கள் கந்தவேலை தேடி பட்டாபிராம் சென்றனர். அப்போது, அவர் வீட்டை காலி செய்துவிட்டு குடும்பத்துடன்  தலைமறைவானது தெரிய வந்தது.இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் திருவள்ளூர் எஸ்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டு, மாவட்ட எஸ்.பி., பொன்னியிடம் புகார் கொடுத்தனர். இப்புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அவர், மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி கண்ணப்பனுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.

Tags :
× RELATED மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்...