×

திருவள்ளூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் வேட்பாளருடன் 3 கார்கள் வர அனுமதி


திருவள்ளூர், மார்ச் 19: திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்கள் தாக்கல் இன்று தொடங்குகிறது.  வேட்பாளருடன் 3 கார்கள் மட்டும் வர அனுமதிக்கப்படும்.  வேட்பு மனு தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வந்துள்ளன. ஆவணங்கள் இல்லாமல் பணம் மற்றும் பொருட்கள்  கொண்டு செல்லப்படுகிறதா என பறக்கும்படை குழுக்கள் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு பணிகள் தீவிரப்
படுத்தப்பட்டு உள்ளன.

இந்நிலையில், வேட்பு மனுத்தாக்கல் இன்று துவங்கி, வரும் 26ம் தேதி வரை நடைபெறுகிறது. மனுக்கள் பரிசீலனை 27ம் தேதியும்,  28 மற்றும் 29ம் தேதிகளில் மனுக்கள்  வாபஸ் வாங்கவும், 29ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.இதனையடுத்து, திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில், வேட்பு மனுக்களை பெறுவதற்கான ஆயத்த பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். கலெக்டர் அலுவலகத்தில் தனியாக இதற்கென அறை ஒதுக்கப்பட்டு ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது.மாவட்ட தேர்தல் அலுவலர் மகேஸ்வரி ரவிக்குமார் கூறுகையில், ‘வேட்பாளர்கள் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். வேட்பு மனுவுடன் தேவையான ஆவணங்கள் இணைக்கப்பட்டு, டெபாசிட் தொகையாக ₹25 ஆயிரமும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினராக இருந்தால், ரூ.12,500ம் செலுத்த வேண்டும்.

வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வழங்கலாம். வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்  செய்வதற்கு வரும்போது, தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகம் இருக்கும் இடத்திலிருந்து, 100 மீட்டர் தூரத்துக்குள் ஊர்வலமாகவோ, கார்களில் கூட்டமாகவோ வலம்  வரவோ கூடாது. 100மீட்டர் தூரத்துக்குள் வேட்பாளருடன் மூன்று கார்கள் மட்டும் அனுமதிக்கப்படும். தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகத்துக்குள், வேட்பாளருடன் நான்கு பேர் மட்டுமே செல்லலாம். ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் உள்ளே வர அனுமதிக்கப்படமாட்டாது. அனைத்து நடவடிக்கைளும் வீடியோ மூலம் பதிவு செய்யப்படும்’ என்றார்.

Tags : constituency ,Tiruvallur ,candidate ,
× RELATED திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தேர்தல்...