ஆவணம் இல்லை கொடைக்கானலில் ரூ.2 லட்சம் பறிமுதல் பறக்கும்படை அதிரடி

கொடைக்கானல், மார்ச் 19: நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா, பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் பொருட்டு தேர்தல் பறக்கும் படையினர் வாகனசோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கொடைக்கானல் பெருமாள்மலை பகுதியில் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவடிவேல் முருகன் தலைமையில் எஸ்எஸ்ஐ சிவதாஸ், போலீசார் ஷாஜகான், செல்வம் உள்ளிட்ட பறக்கும்படையினர் நேற்று வாகனசோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே கர்நாடக மாநில பதிவெண் கொண்ட சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.2 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர் பெங்களூர் சிக்மங்களூர் சையதுகான் பகுதியை சேர்ந்த ரவி என்பது தெரிந்தது. மேலும் கலாசிபாளையம் சர்தார் மண்டியில் இருந்து காய்கறி வாங்க வந்ததாகவும், கொடைக்கானல் பூண்டி பகுதியில் விவசாயி முருகேசனுக்கு இந்த பணத்தை கொடுக்க வந்தாகவும் அவர் தெரிவித்தார். எனினும் ஆவணங்கள் இல்லாததால் பறக்கும்படையினர் பணம், வாகனத்தை பறிமுதல் செய்து கொடைக்கானல் போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: